உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உப்பூர் வெயிலுகந்த விநாயகர்!

உப்பூர் வெயிலுகந்த விநாயகர்!

உப்பூர் சத்திரம் எனும் கிராமம் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டியிலிருந்து 15 கி.மீ. தூரத்தில் உள்ளது. சேதுகடற்கரை சாலை என்று அழைக்கப்படும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. கடற்கரை அருகே அமைந்த இந்த கிராமம் வடமொழியில் லவணபுரம் என வழங்கப்பட்டது. லவனம் என்ற வடசொல்லிற்கு தமிழில் உப்பு என்று பொருள். இதிலிருந்து உப்பூர் என பெயர் வந்தது. சூரியன் இங்கே தவம்புரிந்து, சித்தி பெற்று பாவ விமோசனம் பெற்றதால் சூரியபுரி, தவசித்திபுரி, பாவ விமோசனபுரம் ஆகிய பெயர்கள் வழங்கப்பட்டன. வன்னி, மந்தாரம் ஆகிய மரங்கள் வளர்ந்திருந்ததால் வன்னிமந்தார வனம் எனவும் அழைக்கப்பட்டது.

ராமனுக்கு ஆசி: ஆஞ்சநேயர் மூலம் சீதையின் இருப்பிடத்தை அறிந்த ராமன் தனது பத்தினியை மீட்க வானர சேனைகளுடன் பிரச்சிரவன மலையிலிருந்து கிளம்பி கீழக்கடற்கரை அருகே உள்ள வன்னிவனத்தை அடைந்தார். அமைதியான சூழலில் கோயில் கொண்டிருந்த வெயிலுகந்த விநாயகரை வணங்கி தனக்கு வெற்றி கிட்ட நல்லாசி வழங்குமாறு வேண்டிக் கொண்டார். விநாயகரின் வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டு சேதுக்கரை நோக்கி பயணமானார்.

கர்ண பரம்பரையாக புராணங்கள் வேறுபட்டபோதிலும் இத்திருக்கோயிலை கட்டியவர் ராமநாதபுரம் மன்னரான பாஸ்கரசேதுபதி ஆவார். 1905ம் ஆண்டு இக்கோயில் கட்டியதாக கூறப்படுகிறது. மரத்தடியில் இருந்த இறைவன் ஓர் அர்ச்சகர் வடிவில் கனவில் வந்து எனக்கு எல்லா கோயில்களிலும் உள்ளது போல் கர்ப்பகிரகத்தில் அதாவது அர்த்த மண்டபத்தை மூடவிடாமல் எப்பொழுதும் என் மேல் வெயில்படும்படி கோயில் அமைத்தல் வேண்டும் என்று கூறியதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணத்தால் இத்திருத்தலத்தில் கோயில் கொண்டுள்ள விநாயகர் பெருமான் மீது தட்சிணாயன காலங்களில் தெற்கு பகுதியில் சூரியவெளிச்சம் படுகிறது. உத்தராயண காலங்களில் வடக்கு பக்கமாக சூரிய வெளிச்சம் படுகிறது.

இருப்பிடம் : ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை தாலுகா தொண்டியிலிருந்து 15 கி.மீ., தூரத்தில் சேதுகடற்கரை சாலையில் உப்பூரில் இத்தலம் அமைந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !