உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இருப்பத்தைந்து மஹேஸ்வர வடிவங்கள்

இருப்பத்தைந்து மஹேஸ்வர வடிவங்கள்

உற்பத்தி படைப்பு என்ற சக்தி, ஒவ்வொரு அணுவும் தன்னிலிருந்து தனது உருவமான மற்றொரு அணுவை வெளியிடும் தன்மை படைத்தது. அஃதேபோல், நம் உடலிலுள்ள செல் திசுவுக்கும் உண்டு. அணுவின் ஆற்றலாக அவ்வாற்றலின் மூலம் அடிப்படையாக, இப்பிரபஞ்சத் தோற்றக் கருவான லிங்கவடிவம் இறைவன் பரமசிவம் சதாசிவப் பஞ்சமுகத்திலிருந்து, ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் என ஐந்திலிருந்து ஒவ்வொரு முகமும், தன்னிலிருந்து 5 முகங்களை தனித்தனியே வெளிப்படுத்தியதால் அந்த இருப்பத்தைந்து முகங்களும் மஹேஸ்வர வடிவங்கள் மஹா சதாசிவம் என்றாயிற்று. இவ்விருபத்தைந்தின் அடிப்படை வெளிப்பாடுகளாக, ஆகமக்கூற்றை விளக்கும் எழிலுருவங்களே பெரிதும் கம்பத்தடி மண்டபம் முழுவதும் நிறைந்திருக்கும் அரிய சிற்பங்களாகும். மஹா சதாசிவம் லிங்க மூர்த்தமாயும், அன்னை ஸ்ரீ மீனாஷி ஸ்ரீ ஆதிசங்கரரால் விளக்கப்பட்ட தத்துவமீன்கண்களாக பெருமாட்டி இங்கே துவாத சாந்த ரூபிணியாய், யோக வடிவினளாய், 6 ஆதார விளக்கம், குண்டலினி விளக்கமாய். எழுந்தருளியுள்ளாள்.

உச்சிமுகம் என்ற ஈசானமுகத்தில் தோன்றியவை:

1. சோமாஸ்கந்தர் - அப்பன்-கந்தன்-அன்னை வடிவம்.
2. நடராஜர் - நர்த்தன நாயகன் ஆடவல்லான்
3. ரிஷபாரூடர் - விடையேறி அப்பன், வினாயகர், முருகன்-அன்னை, திருமால் நந்தியாக நின்று இறைக்குடும்பம் தாங்கிநிற்கிறார்
4. கல்யாணசுந்தரர் மணக்கோலக்காட்சி
5. சந்திரசேகரர் சந்திரனைத் தலையில் சூடிய கோலம் கிழக்குமுகமான தத்புருஷத்தில் தோன்றிய முகங்கள் ஐந்து
6. பிட்சாடனர் பிரம்மன் - கபாலஒட்டில் தாருகாவன ரிஷிபத்தினிகளிடம் பிட்சை எடுத்த கோலம்
7. காமதகன மூர்த்தி - காமனை நெற்றிக்கண்ணால் எரித்தது
8. காலசம்ஹாரர் - மார்க்கண்டேயருக்காக யமனை தண்டிக்க வந்தகோலம்
9. ஜலந்திரஹரர் - ஜலந்திரன் என்ற அசுரனை சக்கரத்தால் அழித்த கோலம் கொண்டது
10.       திரிபுரசம்ஹாரர் - முப்புர அசுரர்களை நெருப்பால் அழிக்க வந்த கோலம்

பிரம்மத்தின் தெற்குமுகமான அகோரமுகத்திற் தோன்றியஐந்து முகங்கள்:

11.       கஜசம்ஹாரர் - தாருகாவன ரிஷிகளால் ஏவப்பட்ட யானையைக் கொன்ற நிலை.
12.       வீரபத்ரர் - தட்சனை அழிக்க எம்பெருமானின் போர்க்கோல வடிவம்.
13.       தட்ஷிணாமூர்த்தி - சனகாதி முனிவர்களுக்கு கல்லாலமரத்தின் கீழ் பேசாமற் ஞானம் புலப்பட வைத்த கோலம்.
14.       விஷபாஹரர் - பாற்கடலில் தோன்றிய ஆல கால விஷமருந்தி அருள் செய்த கோலம்.
15.       கிராதமூர்த்தி - அர்ஜுனனுக்கு பாசுபதாஸ்த்திரம் அளித்து அருளிய கோலம்.

பிரம்மத்தின் வடக்குமுகமான வாமதேவத்தில் தோன்றிய ஐந்துமுகங்கள்

16.       கங்காளர் - வாமனர்க்கு வைகுண்டப் பதவிஅளிக்க எடுத்தருளிய கோலம்.
17.       சக்ரதானர் - திருமாலுக்கு சக்கரம், கௌஸ்துவமணி, பீதாம்பரம் அளித்த கோலம்.
18.       கஜமுகஅனுக்கிரஹர் - கணபதிக்கும் ஜராவததத்திற்கும் அருள்செய்த திருக்கோலம்.
19.       சண்டேச அனுக்கிரஹர் - சேய்ஞலூராருக்கு அருள் செய்து சண்டேஸ்வர அனுக்கிரஹ கோலம்.
20.       ஏகபாதர் - சர்வ சம்ஹாரகாலத்தில் அனைத்து உயிர்களின் ஒடுக்கத்தை தன்னுள்ளே ஏற்றருளிய திருக்கோலம்.

பரப்பிரம்மத்தின் மேற்குமுகமான சத்தியோஜாதத்தில் தோன்றிய ஐந்து முகங்கள்

21.       லிங்கோத்பவர் - ஜோதிப் பிழம்பாக, விண்ணும் மண்ணும் தொட திருமால் பிரம்மனுக்காக நின்றருளிய கோலம்.
22.       சுகாஸனர் - உமையவளுக்கு வேதாகமம் உரைத்த திருக்கோலக் காட்சி.
23.       உமாமஹேஸ்வரர் - சிவசக்தி சமேதரராய் அமர்ந்தருளும் திருக்கோலக் காட்சி.
24.       ஹரிஹரமூர்த்தி - சங்கரநாராயணர் மாலும், அரனும் இணைந்து காட்சி தரும் திருக்கோலம்.
25.       அர்த்தநாரி - சிவமும், சக்தியும், சரிபாதியாய் இணைந்திருந்த திருக்கோலக் காட்சி.

ஒவ்வொரு உலக உயிரும் சிவனைத் தன்மயமாகக் கொண்டு பரம சிவத்தோடு ஐக்கியமாக வேண்டுமென்பதே சைவ நெறி வெளிப்பாடாகும். அதை உணர்த்திய சிவனடியார்களான அறுபத்துமூவர் கூறிய வழிமுறைகளே, சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு நிச்சிய வழிகள். இவ்வழிவகைகளை குருமுகமாக அறிதலே சிறப்பும், பயனளிக்கவும், வல்லது.

மதுரை திருக்கோயிலில் பஞ்சசபைகள்
1. முதற்பிராகாரத்தில் பொற்சபையும், கனகசபையும்,
2. வெள்ளியம்பலத்தில் ரஜதசபை வெள்ளிசபை
3. நூற்றுக்கால் மண்டபத்தில் தேவசபை
4. ஆயிரங்கால் மண்டபத்தில் சித்திரசபை எனப் பஞ்சசபையும் அமைந்தவிடம் ஆலவாயன் ஆலயமே.

பஞ்சதாண்டவங்கள்

ஆனந்த தாண்டவம் ‘பொது” சிதம்பரம்
1. படைத்தல் : முனிதாண்டவம் திருநெல்வேலி தாமிரசபை.
2. காத்தல் : சந்தியாதாண்டவம் மதுரை வெள்ளியம்பலம்.
3. அழித்தல் : சங்காரதாண்டவம் திருக்கடவூர்.
4. மறைத்தல் : திரிபுரதாண்டவம் குற்றாலம் சித்திரசபை
5. அருளல் : காளிதாண்டவம் திருவலங்காடு.

காசிக்கு சமமான ஆறு தலங்கள்
1. திருவிடைமருதூர்
2. மாயூரம் என்ற மயிலாடுதுறை
3. திருவெண்காடு
4. திருவையாறு
5. ஸ்ரீ வாஞ்சியம்
6. திருச்சாயிகாடு

ஆதிசேசன் பூஜித்த நான்கு தலங்கள்

1. திருக்குடந்தை
2. திருநாகேஸ்வரம்
3. திருப்பாம்புரம்
4. திருநாகைக்கரோணம்

நதி சங்கமத்தலங்கள்
1. கூடலையாற்றூர்
2. திருநணா - பவானி கூடல்

நந்திகேஸ்வரர்க்கு திருமணமான இடம்

1. திருமழபாடி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !