உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குற்றாலநாதர் கோயிலில் தெப்ப உற்சவம் கோலாகலம்

குற்றாலநாதர் கோயிலில் தெப்ப உற்சவம் கோலாகலம்

குற்றாலம்:குற்றாலம் குற்றாலநாதர் கோயிலில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடந்தது.குற்றாலம் குற்றாலநாதர் குழல்வாய்மொழியம்மை திருக்கோயிலில் ஆண்டு தோறும் தை மாதம் மகம் நட்சத்திரத்தில் திருக்குற்றாலநாதர், குழல்வாய்மொழியம்மை மற்றும் இலஞ்சி முருகப்பெருமான் தெப்பத்தில் பவனி வருகிற தெப்பத் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு தெப்பத் திருவிழா நேற்று நடந்தது.காலையில் இலஞ்சி குமார கடவுளை குற்றாலம் கோயிலுக்கு அழைத்து வந்து இளைப்பாற செய்து சுவாமி, அம்பாள், முருகன் கடவுளுக்கு சிறப்பு பூஜை வழிபாடுகள் நடந்தது. காலை 6மணிக்கு திருவனந்தல், 7மணிக்கு உதயமார்த்தாண்டம் 8மணிக்கு விளாபூஜை, 9மணிக்கு சிலுகாலசந்தி, 10மணிக்கு காலசந்தி, நண்பகல் 12மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 5.30 மணிக்கு சாயரட்சை, சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடந்தது.மாலை 6.30மணியளவில் சுவாமி, அம்பாள் தெப்பத்தில் தயாராக இருந்த தேரில் அமர்ந்து 11முறை தெப்பத்தினை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இரவு குற்றாலநாதர், குழல்வாய்மொழிஅம்பாள், முருகன், வள்ளி, தெய்வானை ஆகிய சுவாமிகள் தனித்தனியாக சப்பரத்தில் எழுந்தருளி வெள்ளி வாகன புறப்பாடு வீதி உலா வந்தனர். இன்னிசை கச்சேரி நடந்தது.விழாவில் தென்காசி, செங்கோட்டை, குற்றாலம், இலஞ்சி, மேலகரம், வல்லம், கொட்டாகுளம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி சுகுமாறன், இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷிணி மற்றும் கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !