விழுப்புரத்தில் கல்லறை திருவிழா
விழுப்புரம்: விழுப்புரத்தில் நடந்த கல்லறை திருவிழாவில் ஏராளமான கிறிஸ்தவர்கள் தங்கள் முன்னோர் கல்லறைகளில் வழிபட்டனர்.விழுப்புரம் கிழக்குப் பாண்டி ரோடு அருகில் உள்ள கல்லறையில் நேற்று அதிகாலை முதல் ஏராளமானோர், குடும்பத்தினருடன் வந்து, தங்கள் முன்னோர்களின் கல்லறையை மலர்களால் அலங்கரித்து, குடும்பத்தினருடன் வழிபட்டனர்.
விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு தூய ஜேம்ஸ் ஆலயத்தில், போதகர் அருட்தந்தை இமானு வேல் கோவில்பிள்ளை தலைமையிலும், கிறிஸ்து அரசர் தேவாலயத்தில், பங்கு தந்தை பிரான்சிஸ் ஜோசப் அகர்வால் தலைமையில் பிரார்த்தனை நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றனர்.திண்டிவனம்:
திண்டிவனம் மரக்காணம் ரோடு சந்திப்பில் உள்ள கல்லறையில், கிறிஸ்தவர்கள், முன்னோர் களின் கல்லறைகளை பூக்களால் அலங்கரித்து குடும்பத்தினருடன் வழிபட்டனர். மூங்கில் துறைப்பட்டு:
மூங்கில்துறைப்பட்டு, சவரியார்பாளையம், மைக்கேல்புரம், ஈருடையாம்பட்டு, அருளம்பாடி, கோனத்தாங்கொட்டாய், புளியாங்கோட்டை பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ கல்லறைகளில் நேற்று கல்லறை திருவிழா நடந்தது. நிகழ்ச்சியில் இறந்தவர்களை வேண்டி அவர்கள் கல்லறைகளை சுத்தம் செய்து மலர்களால் அலங்கரித்து வழிப்பட்டனர். ஈருடையாம்பட்டு, மைக்கேல்புரம், அருளம்பாடி போன்ற பகுதிகளில் உள்ள கிறுஸ்துவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.