உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவனின் ராத்திரி சிவராத்தி!

சிவனின் ராத்திரி சிவராத்தி!

அர்ஜுனன் தவம் செய்து பாசுபதம் (பசுபதி+சிவன்) என்ற அஸ்திரத்தைப் பெற்றான். கண்ணப்ப நாயனார் குருதி வடியும் லிங்க வடிவிலிருந்த ஈசனின் கண்மீது தன் கண்களைப் பெயர்த்தெடுத்து பொருத்தி முக்தி அடைந்தான். பகீரதன் கடுந்தவம் இயற்றிக் கங்கையை பூமிக்குக் கொணர்ந்தான். மார்க்கண்டேயனுக்காக யமனையே சிவபெருமான் சம்ஹாரம் செய்தார். பார்வதிதேவி அருந்தவம் இயற்றி சிவபெருமானின் இடப்பாகத்தில் இடம்பெற்றுச் சிவனையே உமையொரு பாகனாகச் செய்தார். சிவபெருமான் காலனை உதைத்தார். லிங்ககோற்பவராக ஈசனை தோன்றினார்.  உமயவள், மகேசனிடம் ஆகம உபதேசம் பெற்றாள். சிவபெருமான், நஞ்சு உண்டார்.

எல்லாம் சிவமயம்!

சிவம் என்றால், மங்களம், செல்வம், சுபம் என்றும் அர்த்தங்கள் உண்டு. நவகிரகங்களில் சூரியனுக்கு சிவனே அதிதேவதை. சூரியனை ஆதிகாலத்தில் சிவந்தன் என்றே அழைத்தனர். பழங்காலத்தில் சிவந்தனாகிய சூரியனை வழிபட்ட பழக்கமே சிவ வழிபாடானது என்பர். சிவ வழிபாடே உலகில் முதலாவதாகத் தோன்றிய தெய்வ வழிபாடு என்பர். இதனை உலகின் தொன்மையான சிந்து சமவெளிப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சிவச்சின்னமே ஆதாரமாகக் கூறப்படுகிறது. மரங்களுள் பெரிதானதும் நீண்ட ஆயுள் உள்ளதுமான ஆலமரமே சிவனின் இருப்பிடமாக அக்காலத்தில் கருதப்பட்டது. பழந்தமிழ் நூலான சிறுபாணாற்றுப் படையில், மன்னன் ஒருவன் தனக்குக் கிடைத்த மிக அரிதான ஆடையினை ஆலமர் செல்வனாகிய ஈசனுக்கு சாத்தியதான குறிப்பு உள்ளது. அகநானூறிலும் ஆலமரத்தில் ஈசன் வசிப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது.  தீபங்கள் கண்டறியப்படாத கால கட்டத்தில் இரவு நேரத்தில் மரங்களின் அசைவுகளால் ஏற்பட்ட ஓசை மக்களை அச்சுறுத்தியது. அதனால் காவலாக தூங்காமல் விழித்திருந்தனர். தீயும் விளக்குகளும் கண்டுபிடிக்கப்பட்டபின் பயமின்றி உறங்கிய அவர்கள், ஜோதியையே சிவனாக பாவித்து வழிபட ஆரம்பித்தனர். தாங்கள் தூங்காமல் இருந்த நாட்களை நினைவு கூரவே ஆண்டில் ஒருநாள் உறங்காமல் விரதம் அனுஷ்டித்தனர். அதுவே சிவராத்திரி விரதம் தோன்றிய விதம் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து.

வேதங்களும், ஆகமங்களும் தோன்றியது சிவபிரானிடம் இருந்தே என்கின்றன புராணங்கள். ஈசனின் உடுக்கை ஓசையில் இருந்தே உலகம் பிறந்ததாகச் சொல்கிறது. சிவமகாத்மியம். உலகம் தோன்றியபோது பேரொலி எழுந்ததை இன்றைய விஞ்ஞானம் ஒப்புக்கொள்கிறது. நந்தி தேவரின் கொம்புகளுக்கு இடையில் சிவபிரான் பிரதோஷ தாண்டவத்தை ஆடியதாகச் சொல்லப்படுவதன் அர்த்தம் என்ன தெரியுமா? தன்னை வழிபடும் பக்தர்தம் நெற்றியில் புருவ மையத்தில் வெம்மை வடிவமாக சிவன் ஆட்சி செய்கிறார் என்பதுதான். அதனையே தனது நெற்றிக்கண்ணாலும் உணர்த்துகிறார் ஈசன். நாம் நெற்றியில் பொட்டு இட்டுக் கொள்வது அவரது வெம்மையைத் தணிக்கவே. கோயில்களில் சிவலிங்கத்தின் மேல் தாராபாத்திரத்தின் மூலம் சதா அபிஷேகம் செய்து அவரைக் குளிர்விப்பதற்குச் சமமானது இது. சிவனுக்காக திருநீரும், அவரோடு இணைந்திருக்கும் அம்பிக்கைக்காக குங்குமம் முதலான மங்களத் திலகங்களும் இடுகிறோம். அருவமாக உள்ள இறைவனை உருவமாக வழிபட்டு பிறகு அருவுருவமாகத் துதித்து முடிவில் அவராகவே மாறிவிடுவதையே சிவனின் அருவ, உருவ, அருவுருவ வடிவங்கள் குறிக்கின்றன.

நமது உடலில் ப்ராணன், அபானன், உதானன், வியானன், சமானன் ஆகிய ஐந்து வாயுக்கள் இருக்கின்றன. அவையே நம் உடலின் இயக்கங்களைக் கட்டுப்படுத்துகின்றன. இதயே சிவனின் ஐந்து முகங்கள் உணர்த்துகின்றன. சிவனே எல்லா உயிர்களிலும் ஜீவனாக உறைவதாக வேத, புராணங்கள் உரைக்கின்றன. அறிவு அதிகமானால் ஆணவமும், செல்வம் சேர்ந்தால் செருக்கு ஏற்படும். அதனால் போட்டியும் பொறைமையுமே ஏற்படும். அதனை உணர்த்தவே திருமால், பிரம்மன் முன் ஜோதிவடிவமாகத் தோன்றி திருவிளையாடல் செய்தார் இடப வாகனன்.  திக்கு என்றால் திசைகள். அம்பரம் என்பது ஆடையைக் குறிக்கும். சிவனாரின் திகம்பரர் என்ற பெயருக்கு திக்குகளையே ஆடையாக அணிந்தவர் என்று அர்த்தம் சொல்வர். ஆனால் எல்லா திசையிலுமுள்ள உயிர்களை ஆடைபோல் போர்த்தி, தன்னுள் அடக்கிக் காப்பவர் என்பதே அப்பெயரின் உட்பொருள்! அதனாலேயே எல்லாம் சிவமயம் என்றார்கள் சித்தர்களும் யோகிகளும்.

பிரம்மாவின் பிள்ளையாக வந்த சிவன்

ஒரு சமயம் பிரம்மா, தனக்கு யாரும் நிகரில்லை என்ற கர்வத்துடன் இருந்தார். அப்போது அவரது தொடையில் இருந்து, கழுத்து நீளமாகவும், தலைமுடி சிவப்பாகவும் உள்ள ஒரு குழந்தை தோன்றியது. வீறிட்டு அழத்தொடங்கிய குழந்தையை சமாதானப்படுத்த நான்முகன், அதனை ருத்ரா என அழைத்தார். குழந்தை அப்போதும் அழுவதை நிறுத்தாததால் பவன், சிவன், பசுபதி, ஈசன், பீமன், உக்ரன், மகாதேவன் ஆகிய பெயர்களால் அழைத்தார். அதன்பிறகே குழந்தை அழுவதை நிறுத்தியது. அப்போதுதான் பிரம்மாவுக்கு ஓர் உண்மை புரிந்தது. உலகிற்கே தலைவனான இறைவனே குழந்தை எனும்போது தான் எந்த நிலையில் இருக்கிறோம் என உணர்ந்தார். தலைகனம் விட்டு படைப்புத் தொழிலைத் தொடர்ந்தார். பிரம்மாவால் சிவனுக்கு சூட்டப்பட்ட எட்டுப் பெயர்களும் அவருக்கு உரிய சிறப்பான திருநாமங்களாகப் போற்றப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !