சுருட்டப்பள்ளி கோவிலில் சிவராத்திரி விழா
ஊத்துக்கோட்டை :சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டேஸ்வரர் கோவில், சிவராத்திரி விழாவில் நேற்று உற்சவர் பூத வாகனத்தில் கோவிலை உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஊத்துக்கோட்டை அடுத்த, சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டேஸ்வரர் கோவிலில் கடந்த 13ம் தேதி, 10 நாட்கள் சிவராத்திரி விழா விநாயகர் பூஜையுடன் துவங்கியது. அன்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து, யாக சாலை பூஜை மற்றும் உற்சவர் சிறப்பு அலங்காரத்துடன் கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மறுநாள், 14ம் தேதி காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், மாலை சந்திரப்பிரபையில் உற்சவர் வலம் வந்தார். புதன்கிழமை காமதேனு வாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று வியாழக்கிழமை காலை அம்மனுக்கு அபிஷேகமும், யாக சாலை பூஜையும், மாலை பூத வாகனத்தில் சுவாமி வலம் வந்து பக்தர்க்கு அருள்பாலித்தார். இன்று வெள்ளிக்கிழமை உற்சவர் அதிகார நந்தி வாகனத்திலும், நாளை சனிக்கிழமை கஜ வாகனத்திலும், 19ம் தேதி அஸ்வ வாகனத்திலும், 20ம்தேதி மாலை 5 மணிக்கு ரிஷப வாகனத்திலும் கோவிலை வலம் வருவார்.
நான்கு கால யாக பூஜை: வரும், 20ம் தேதி சிவாலயங்களில் சிவராத்திரி தினத்தை ஒட்டி, 4 கால பூஜைகள் நடைபெறும். அன்று மாலை 6 மணிக்கு, முதல் கால யாக பூஜையும், 9 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, நள்ளிரவு 12 மணிக்கு, 3ம் கால யாக பூஜையும், மறுநாள் விடியற்காலை நான்கு மணிக்கு, 4ம் கால யாக பூஜையும் நடைபெறும். 21ம் தேதி காலை 7 மணிக்கு, நடராஜருக்கு அபிஷேகமும், மாலை 5 மணிக்கு கற்பக விருட்ச வாகனத்தில் கோவிலை வலம் வருவார். கடைசி நாளான, 22ம் தேதி புதன்கிழமை மாலை 5 மணிக்கு ராவணாசூர வாகனத்தில் உற்சவர் கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். ஒவ்வொரு நாளும் கோலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.