அங்காளம்மன் கோவிலில் இரண்டாம் கால யாக பூஜை
ADDED :2598 days ago
கருமத்தம்பட்டி: சூலுார் அருகே உள்ளது அரசூர் ஊராட்சி. இங்குள்ள அங்காளம்மன் ஆலயத்தில் நேற்று காலை 7:30 மணி முதல் இரண்டாம் கால யாக பூஜைகள் தருண கணபதி பூஜை நடந்தது. மஹா சண்டியாகம் துவங்கியது.இதில், மூலமந்திரம், காயத்ரி ஹோமம், பிரம்மச்சாரி, கோ பூஜை, கன்யா பூஜை, சுமங்கலி பூஜை மற்றும் தம்பதி பூஜைகள் நடந்தன. மதியம் இரண்டு மணிக்கு ஆயிரக்கணக்கான மக்களுக்கு அன்னதானமும் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.முன்னதாக, அங்காளம்மனை மகா சண்டியாக அலங்கரித்து, அதன் முன்னே பெரும் யாக குண்டம் வளர்த்து வேத மந்திரங்கள் முழங்கின. உடுக்கை ஒலி அதிர அதிர அம்மனின் அருள் சரணங்கள் விதந்தோதப்பட்டன. அரசூரை சேர்ந்த பக்தர்கள் சண்டி யாகத்திற்கு தேவையான பட்டு வஸ்திரம், காய்கறிகள், பழங்கள் மற்றும் திரவியங்களும், தாராளமான நிதி உதவியும் வழங்கியது குறிப்பிடத்தக்கதாகும்.