உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புத்திரகவுண்டன்பாளையத்தில், 126 அடி உயர முருகன் சிலை வேல், வாசற்கால் பிரதிஷ்டை

புத்திரகவுண்டன்பாளையத்தில், 126 அடி உயர முருகன் சிலை வேல், வாசற்கால் பிரதிஷ்டை

பெ.நா.பாளையம்: புத்திரகவுண்டன்பாளையத்தில், 126 அடி முருகன் சிலை பீடத்தில், வேல், வாசற்கால் பிரதிஷ்டை விழா நடந்தது.

பெத்தநாயக்கன்பாளையம், புத்திரகவுண்டன்பாளையம், முத்துநகரில், 126 அடி உயர முத்து மலை முருகன் சிலையை, திருவாரூர் சிற்பி தியாகராஜன் தலைமையில், 100க்கும் மேற் பட்டோர் வடிவமைத்து வருகின்றனர். அதையொட்டி, நேற்று (ஜன., 20ல்)காலை, 8:00 மணிக்கு, யானை, குதிரை, பசுமாடுடன், 108 பெண்கள் பால்குடம், மேள, தாளத்துடன் ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து, கோ பூஜை, சிறப்பு யாகம் நடந்தது. மதியம், 12:00 மணிக்கு, வேல், வாசற்கால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது.

இதையொட்டி, முருகன், வள்ளி, தெய்வானை உற்சவ மூர்த்திகள், சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். மேலும், மகுடஞ்சாவடி மாரியம்மன் நண்பர்கள் குழுவினரின், காவடி யாட்டம் நடந்தது. இதுகுறித்து, சிலை அமைப்பு குழு நிர்வாகி ஸ்ரீதர் கூறுகையில், முருகன் சிலைக்கு வண்ணம் தீட்டுதல், கோவில் மண்டபம், சிலைகள் வைத்தல் என்பன உள்ளிட்ட பணிகள், வரும், 2020க்குள் நிறைவடைந்து, கும்பாபிஷேகம் நடக்கும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !