உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னையில் மாசி மக தீர்த்தவாரி உற்சவம் கோலாகலம்

சென்னையில் மாசி மக தீர்த்தவாரி உற்சவம் கோலாகலம்

சென்னை: மாசி மகத்தை முன்னிட்டு, சென்னை மற்றும் புறநகரில் உள்ள, பல கோவில்களில், தீர்த்தவாரி உற்சவம் விமரிசையாக நடந்தது. உற்சவர்கள், கடலில் நீராடி, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மாசி மாத பவுர்ணமியுடன், மகம் நட்சத்திரம் சேர்ந்து வரும் நாள், மாசி மகம் எனப்படும். ஹிந்துக்களால் கொண்டாடப்படும் இப்பண்டிகை, நேற்று விமரிசையாக அரங்கேறியது.

மாசி மகத்தை, கடலாடும் நாள், தீர்த்த மாடும் நாள் என, அழைப்பர். மாசி மகம் திருவிழாவை முன்னிட்டு, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு, உற்சவர் பார்த்த சாரதி பெருமாள், கருடவாகனத்தில், சக்ரத்தாழ்வாருடன், மெரினா கடற்கரையில் எழுந்தருளினார்.அங்கு தீர்த்தமாடும் நிகழ்ச்சி முடித்து, கோவில் திரும்பினார். இதில்,ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, பெருமாளை தரிசித்தனர். மாசி மகத்தை முன்னிட்டு, மயிலாப்பூர் கோலவிழியம்மன் கோவிலில், மகா சண்டியாகம் நடைபெற்றது. பெசன்ட்நகர் அஷ்டலட்சுமி கோவில், கபாலீஸ்வரர், காரணீஸ்வரர், திருநீர்மலை ரங்கநாதர், சிந்தாதிரிப்பேட்டை வைரவேல் முருகன், திருவல்லிக்கேணி எல்லையம்மன், திருவேற்காடு கருமாரியம்மன் உள்ளிட்ட கோவில்களில், தீர்த்தவாரி உற்சவம் சிறப்பாக நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !