உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆரோவில் உதய தினம்: பக்தர்கள் தியானம்

ஆரோவில் உதய தினம்: பக்தர்கள் தியானம்

 புதுச்சேரி, சர்வதேச நகரமான, ஆரோவில், 51வது உதய நாளையொட்டி, நேற்று, போன் பயர் ஏற்றி, கூட்டு தியானத்தில் ஈடுபட்டனர்.புதுச்சேரியில் இருந்து, 15 கி.மீ.,யில் அமைந்துள்ள, ஆரோவில் சர்வதேச நகரை வடிவமைக்கும் பணியில், பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்கள், ஜாதி, மதம், இனம், மொழி, அரசியல் வேறுபாடுகளைக் கடந்து, அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வருகின்றனர்.

உலகில், மனித இன ஒற்றுமையின் சின்னமாக, சர்வதேச நகரை உருவாக்க வேண்டும் என்ற கருத்து, முதன் முதலாக, தத்துவ ஞானி அரவிந்தர் எழுத்துக்களில் இருந்து தோன்றியது. ஆரோவில் குறித்த பொது அறிக்கை, 1965ல் வெளியிடப்பட்டது. 1966ல், ஆரோவில் குறித்த திட்டம், யுனெஸ்கோ பொது சபையில், இந்திய அரசால் வைக்கப்பட்டு, ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.அரவிந்தர் ஆசிரம அன்னையின் பெரும் முயற்சியால், 1968, பிப்ரவரி 28ல், ஆரோவில் சர்வதேச நகரம் துவங்கப்பட்டது. நகரம் துவக்கப்பட்ட நாளில் இருந்து, ஆண்டுதோறும் ஆரோவில் உதய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி, 51வது உதய தினம், நேற்று, கொண்டாடப்பட்டது. ஆரோவில்லில் வசிக்கும், பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள், மாத்திர் மந்திர் அருகில் அமைந்துள்ள ஆம்பி தியேட்டரில், அதிகாலை, 4:30 மணிக்கு கூடினர். 5:00 மணிக்கு, போன் பயர் எனப்படும் தீ மூட்டி, 6:00 மணி வரை, கூட்டு தியானத்தில் ஈடுபட்டனர். தியானத்தின்போது, ஆரோவில் சாசனம் அன்னையின் குரலில் ஒலிபரப்பானது.போன் பயர் தீப்பிழம்பின் பின்னணியில், மாத்திரி மந்திர் தங்க நிறத்தில் ஜொலித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !