உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உத்தரகோசமங்கை கோயிலில் 12 மணி நேர நாட்டியாஞ்சலி

உத்தரகோசமங்கை கோயிலில் 12 மணி நேர நாட்டியாஞ்சலி

 ராமநாதபுரம்:மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு ராமநாதபுரம் தேவஸ்தானம் மற்றும் கலை பண்பாட்டுத்துறை சார்பில் உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயிலில் 300 பரத கலைஞர்கள் பங்கேற்கும் 12 மண நேர தொடர் நாட்டியாஞ்சலி நடக்கிறது.

உத்தரகோசமங்கையில் மங்களநாத சமேத மங்களேஸ்வரி அம்மன் என்ற பழமையான கோயில் உள்ளது. இங்கு மரகத நடராஜர் சன்னதி உள்ளது. இங்கு மகாசிவராத்திரி திருநாளான இன்று(மார்ச் 3) மாலை 6:00 மணி முதல் தொடர்ந்து இடை விடாமல் காலை 6:00  மணி வரை 12:00 மணி நேரம் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடக்கிறது. இதில் அனுமதி இலவசம். 1,500 பேர் நிகழ்ச்சியை பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இருந்து 10 க்கும் மேற்பட்ட குழுக்கள் வருகின்றன. 72 பரதக்கலைஞர்கள் உட்பட 300 கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.சுமனா ரமேஷ், ஸ்வர்ணமால்யா, ஸ்ருதி சேகர், ஊர்மிளா சத்தியநாராயணன், சைலஜா, அஸ்ரிதா வேமுகண்டி, ஸ்ரீராம் உட்பட முக்கிய  பரத கலைஞர்கள் பங்கேற்கின்றனர். இரவு முழுவதும் அரசு சிறப்பு பஸ் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து கலைப்பண்பாட்டுத்துறை, அரசு இசைப்பள்ளிகளின் கலையியல் அறிவுரைஞர் பூர்ண புஷ்கலா கூறியதாவது:அரசு சார்பில் இது போன்று தொடர்ந்து 12:00  மணி நேரம் நாட்டியாஞ்சலி நடத்துவது இதுவே முதன் முறையாகும். இதில் கலைமாமணி விருது பெற்ற பரத கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.

அனைவருக்கும் கலை மீதான ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் நடக்கிறது, என்றார்.ராமநாதபுரம் தேவஸ்தான நிர்வாக செயலாளர் பழனிவேல் பாண்டியன் கூறுகையில், மங்களநாதசுவாமி கோயில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை கலைபண்பாட்டுத்துறை, இந்துசமய  அறநிலையத்துறை, தேவஸ்தானம் இணைந்து நடத்துகிறது. தேவஸ்தானம் சார்பில் மேடை அரங்கு, மற்று பார்வையாளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தரப்படவுள்ளது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !