மடத்துக்குளம் அருகே, கோட்டை மாரியம்மன் திருவிழா துவங்கியது: கம்பத்துக்கு மஞ்சள் நீர் ஊற்றி வழிபாடு
மடத்துக்குளம்: மடத்துக்குளம் அருகே, பழமை வாய்ந்த கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா, கம்பம் நடுதலுடன் தொடங்கியது.
மடத்துக்குளம் தாலுகா கொழுமம் கோட்டை மாரியம்மன் கோவில், பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அமராவதி ஆற்றங்கரை ஓரம் உள்ள இந்த கோவிலில், ஆண்டு தோறும் கோடையில் திருவிழா நடப்பது வழக்கம்.
இந்த ஆண்டு, நேற்று (ஏப்., 24ல்) அதிகாலை, 1:30 மணிக்கு கம்பம் நடுதலுடன் விழா தொடங் கியது. நேற்றுமுன்தினம் (ஏப்., 23ல்)விக்னேஸ்வரபூஜை, இரவு, ஊர் முழுவதும் நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.மே 4ம் தேதி இரவு 11:00 மணிக்கு பூவோடு எடுத்து வந்து, கம்பம் பகுதியில் வைத்தலும் 5ம் தேதி, இரவு 11:00 மணிக்கு திருக்கம்பத்தில் பூவோடு வைத்தலும் நடைபெறுகிறது.மே 6ம் தேதி இரவு 8:00 மணிக்கு, அன்னாபிஷேகம், அம்மன் ஊஞ்சல், இரவு,12:00 மணிக்கு திருக்கம்பத்தில் பூவோடு வைத்தல், 7 மற்றும் 8ம்தேதி, பொதுமக்கள் பூவோடு எடுத்தல், இரவு 9:00 மணிக்கு புஷ்பரதத்தில் சாமி புறப்பாடும் நடைபெறும்.
வரும் 9ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு திருக்கம்பம் அமராவதி நதியில் சேர்த்தல், காலை 8:00 மணிக்கு மஞ்சள் நீர் ஊர்வலம், சாமி மண்டபப்படி புறப்பாடு, 15ம் தேதி, மாலை 6:00 மணிக்கு மகா அபிஷேகம் நடக்கிறது.ஏப்.24 முதல் மே 6ம் தேதி வரை தினசரி மாலை 4:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று (ஏப்., 24ல்) அதிகாலை முதல் திருக்கம்பத்துக்கு பக்தர்கள் மஞ்சள் நீர் தீர்த்தம் செலுத்தியும், பூக்கள், மாலைகள் அணிவித்தும் வணங்குகின்றனர்.கோட்டை மாரியம்மன் இங்கு லிங்கம் வடிவில் அருள்பாலிப்பது, இந்தக்கோவிலின் சிறப்பம்சம் ஆகும்.