உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோதண்டராமர் பயணம் சாலையால் பணி நிறுத்தம்

கோதண்டராமர் பயணம் சாலையால் பணி நிறுத்தம்

ஓசூர்: சூளகிரி அடுத்த, சின்னாறு தேசிய நெடுஞ்சாலைக்கு செல்ல, தற்காலிக சாலை அமைக்கும் பணி நடந்ததால், நேற்று கோதண்டராமர் சிலையின் பயணம், நிறுத்தப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில், 108 அடி உயரத்தில், 350 டன் எடையில் கல் வெட்டி எடுக்கப்பட்டு, கோதண்டராமர் முகம் வடிவமைக்கப்பட்டது. கர்நாடக மாநிலம், ஈஜிபுரா பகுதியில், சிலையை பிரதிஷ்டை செய்ய, கார்கோ லாரியில் எடுத்து செல்லப்படுகிறது.

நவ., 7ல், புறப்பட்ட லாரி, கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த மேலுமலை அருகே, வனத்துறையினரின் அனுமதி கிடைக்காததால், 83 நாட்கள் நிறுத்தப்பட்டது.உரிய அனுமதிக்கு பின், மே, 3ல், சாமல்பள்ளம் பகுதி ஆற்றின் குறுக்கே அமைத்த தற்காலிக சாலையை கடந்து, கர்நாடக மாநிலம் நோக்கி, கோதண்டராமர் சிலை புறப்பட்டது.சூளகிரி அடுத்த சின்னாறு பகுதியில், அன்றிரவு நிறுத்தப்பட்டது. சின்னாறு தற்காலிக சாலையை கடந்து, தேசிய நெடுஞ்சாலை ‍செல்லும் இடத்துக்கு முன், சாலையோர மேட்டில் லாரி ஏற முடியவில்லை. அந்த பாதையை, சரி செய்து சீரமைக்கும் பணி, நேற்று முன்தினம் இரவு முதல் நடந்தது. இந்த சாலையில் ஈரமாக இருந்த மண்ணில், லாரி டயர்கள் சிக்கும் என்பதால், நேற்று கோதண்டராமர் சிலை சின்னாறு பகுதியிலேயே நிறுத்தப்பட்டது. பாதையை சீரமைக்கும் பணி, தொடர்ந்து நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !