குன்னூர் முத்துமாரியம்மன் கோவிலில் பூகுண்டம் திருவிழா
குன்னூர்: குன்னூர் அருகே பழைய அருவங்காடு முத்துமாரியம்மன் கோவிலில் 47வது ஆண்டு திருக்கரகம் மற்றும் பூகுண்டம் திருவிழா நேற்று (மே., 12ல்) நடந்தது.கடந்த 9ம் தேதி கணபதி ஹோமம், கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து விநாயகர், அம்மன் அபிஷேகம், கம்பம் சாட்டுதல், கங்கையில் கரக ஜோடனை, நவகிரக பூஜை, அபிஷேக ஆராதனை நடந்தன.தொடர்ந்து பிளேக் மாரியம்மன் கோவில், மதுரை வீரன் கோவில்களில் சிறப்பு பூஜை, கஞ்சிவார்த்தல், ஆகியவை நடந்தன.
நேற்று (மே., 12ல்) காலை 11:30 மணியளவில் நடந்த பூகுண்டம் திருவிழாவில், தீச்சட்டி, கரக உற்சவத்தில் பங்கேற்ற பக்தர்கள் உட்பட விரதம் மேற்கொண்டவர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.தொடர்ந்து அன்னதானம், மாவிளக்கு பூஜை, இன்னிசை கச்சேரி, அம்மன் திருவீதி உலா, கங்கை சேர்த்தல் ஆகியவை நடந்தன. இன்று (மே., 13ல்)மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா, விழா கமிட்டியினர், பழைய அருவங்காடு ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.