பெருந்துறை விஜயபுரி அம்மன் கோவில் தேரோட்ட விழா: 25 ஆண்டுக்கு பின் விமரிசையாக நடந்தது
பெருந்துறை: விஜயபுரி அம்மன் கோவில் தேரோட்ட விழா, 25 ஆண்டுகளுக்குப் பின், வெகு விமரிசையாக நடந்தது.
பெருந்துறையை அடுத்த விஜயமங்கலத்தில், பிரசித்தி பெற்ற ஸ்ரீவிஜயபுரி அம்மன் கோவில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோவிலில், 25 ஆண்டுகளாக தேரோட்டம் நடக்கவில்லை.
இதனால் கோவில் தேர், பராமரிப்பின்றி சிதிலமானது. இந்நிலையில், 10 லட்சம் ரூபாய் செலவில், தேர் புதுப்பிக்கப்பட்டு வெள்ளோட்டம் விடப்பட்டது. இதையடுத்து, 25 ஆண்டுகளுக் குப் பின், தேரோட்ட விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. கடந்த, 19ல், பூச்சாட்டு, கொடியேற் றம், கங்கணம் கட்டுதலுடன், விழா தொடங்கியது. நேற்று முன்தினம் (ஜூன்., 27ல்) வரை, பல்வேறு சிறப்பு பூஜை, நிகழ்வுகள் நடந்தன.
விழா ஒன்பதாம் நாளான நேற்று (ஜூன்., 27ல்) காலை, கூனம்பட்டி கல்யாணபுரி, 57வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ ராஜமாணிக்கவாசக சுவாமிகள் தலைமையில், தேர் வடம் பிடித்தல் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், ஓம்சக்தி பராசக்தி ஓம் சக்தி கோஷம் முழங்க, வடம் பிடித்து இழுத்தனர். நாளை (ஜூன்., 29ல்) மாலை, தேர் நிலை சேர்கிறது. ஜூலை 1ல், அம்பிகை தரிசனம், 2ல் மறுபூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.