உடுமலையில் வரலாறு பேசும் கம்பீரமான குமிழி துாம்பு துாண்கள்
உடுமலை பகுதியிலுள்ள குளங்களில், காணப்படும் குமிழி துாம்பு துாண்கள், நீர் மேலாண்மை யில் சிறந்து விளங்கியதற்கான சாட்சியாக இன்றும் காட்சியளிக்கிறது.முந்தைய காலத்தில், நீர் மேலாண்மைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அந்த வழிமுறைகளை தெரிந்து கொள்ளாமல், பழைய கட்டமைப்புகளை சிதைத்ததால், இன்று குடிநீர் பஞ்சத்திலும், வறட்சியிலும் சிக்கித்தவிக்கிறோம்.
முன்னோர்கள் பின்பற்றிய நீர் மேலாண்மையில் சில வழிமுறைகளை மீண்டும் செயலாக்கத் துக்கு கொண்டு வருவது அவசியம்.குளங்கள் வரலாறு பெருவெள்ளமாக ஓடிய மழை நீரை தேக்கி, விவசாயத்துக்கு பயன்படுத்தியது, மனித சமூக வரலாற்றில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியது. நீரோட்டத்தின் இயல்பை கண்டறிந்து, தண்ணீரை தேக்கி, பாசனத்துக்கு பயன் படுத்தியுள்ளனர். அத்தகைய பழமையான பாசன முறைகளில், உடுமலை அருகேயுள்ள ஏழு குள பாசன திட்டமும் ஒன்றாகும். மழைக்கால வெள்ளத்தை அடுக்குத்தொடராக குளங்கள் அமைத்து, ஒவ்வொரு குளமாக நிரப்பி, உபரி நீர் ஓடை வழியாக வெளியேற கட்டமைப்பு களை ஏற்படுத்தியுள்ளனர்.
உடுமலை அருகே, 404 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பெரிய குளம், இப்பாசனத் திட்டத் தின் முக்கிய ஆதாரமாகும். இக்குளத்தில், நீர் மேலாண்மைக்காக முன்னோர்களால், குமிழி துாம்பு, என்ற துாண் ஏற்படுத்தப்பட்டுள்ளது.அதே போல், பொன்னலாம்மன்சோலையில், ஆற்றில் நீரோட்டத்தை திசை திருப்ப, தடுப்பணை போன்ற அமைப்பும், பல நுாற்றாண்டுகளு க்கு முற்பட்டதாகும்.குமிழி துாம்பு பயன்கள்குளத்தில் இருந்து தேவையான அளவுக்கு நீரை திருப்ப இந்த துாம்பு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த துாணை ஒட்டி, கல் பெட்டி போன்று அமைத்து, அதில், துளைகள் விடப்பட்டிருக்கும். இத்துளைகள் வழியாக நீரை வெளியேற்றுவார்கள். நீரோடி, சேரோடி என்ற அமைப்புகளுடன், இந்த கட்டமைப்பு இருக்கும். பாசனத்திற்குத் தண்ணீர் வேண்டியபோது, நீரோடி துளையில் உள்ள கல்லை எடுத்து விடுவார்கள்.அப்போது குளத்தின் நீர், நீரோடி துளை வழியாக, 80 சதவீத மும், சேரோடி வழியாக 20 சதவீதம் சேறு கலந்த நீரும் வெளியேறும். இதனால், குளத்தின் நீர்த்தேக்க பரப்பில், அதிக மண் தேங்குவது தடுக்கப்படும்.
குளத்தில் தங்கியுள்ள சேறு, அழுத்தப்பட்டு குறைந்த அழுத்தம் உள்ள கல் தொட்டிக்கு வந்து தண்ணீருடன் கலந்து பாசனத்திற்கு சத்துள்ள நீராக சென்றுவிடும். சத்தான மண் விளை நிலங்களுக்கு செல்வதுடன், துார்வாரும் பணியும் குறையும் என குமிழி துாம்பு குறித்து, வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.குளத்தின் கரைகளில், மதகுகள் அமைக்கப்பட்ட பின், குமிழி துாம்புகள் பயன்பாடு இல்லாமல், புறக்கணிக்கப்பட்டன. துாம்மை ஒட்டி அமைக்கப்பட்ட கல்பெட்டி, சேரோடி, நீரோடி ஆகிய அமைப்புகள் முற்றிலுமாக சிதைந்து காணாமல் போய் விட்டன.
தற்போது, குமிழி துாம்பின் துாண்கள் மட்டுமே, உயரமாக காணப்படுகின்றன. இத்தகைய கட்டமைப்பு, உடுமலை பகுதியிலுள்ள சில குளங்களில் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளன. இத்தகைய கட்டமைப்புகள் சிதிலமடைந்து முற்றிலுமாக காணாமல் போகும் முன்,அவற்றை சீரமைத்து, தற்போதைய சந்ததியினருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாகும்.