சென்னிமலையில் ஏப்.,2ல் பங்குனி உத்திர விழா துவக்கம்!
சென்னிமலை : சென்னிமலை முருகன் கோவில் பங்குனி உத்திரத் திருவிழா ஏப்., 2ம் தேதி துவங்குகிறது. ஏப்ரல் 5ம் தேதி காலை தேரோட்டம் நடக்கிறது. ஈரோடு மாவட்ட முருகன் தலங்களில் சென்னிமலை முருகன் கோவில் முக்கியமானது. இந்த மலைக் கோவிலில்தான் பால தேவராய ஸ்வாமிகள் அருளிய கந்தர் சஷ்டி கவசம் அறங்கேற்றம் செய்யப்பட்டது. அருணகிரி நாதர் தான் பாடிய திருப்புகழில், சென்னிமலை முருகப்பெருமானை பற்றி ஐந்து பாடல்கள் பாடியுள்ளார். வேறு எந்த முருகன் கோவிலிலும் இல்லாத சிறப்பாக இங்கு முருகப்பெருமானுக்கு இரண்டு திருத்தேர்கள் உண்டு. தைப்பூசம், பங்குனி உத்திர விழாவில் இவை இழுக்கப்படுகின்றன. ஆண்டு தோறும் பங்குனி தேரோட்டம் சிறப்பாக நடந்து வருகிறது. நடப்பாண்டு தேரோட்டம் ஏப்., 2ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. 3ம் தேதி கொடியேற்றம் நடக்கிறது. 4ம் தேதி இரவு திருக்கல்யாணம் நடக்கிறது. ஏப்., 5ம் தேதி வியாழக்கிழமை காலை 5.03 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் ரதாரோகணக்காட்சியும், காலை 7 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது. அன்று காலை தேவஸ்தான மண்டபத்தில் அன்னதானம் நடக்கிறது. மாலையில் தேர் நிலை சேர்கிறது. ஏப்., 6ம் தேதி காலை பரிவேட்டை நிகழ்ச்சியும், இரவு தெப்பத்தேர் நிகழ்ச்சி நடக்கிறது. 7ம் தேதி காலை மஹாதரிசனம் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 8 மணிக்கு மஞ்சள் நீர் அபிஷேகத்துடன் பங்குனி உத்திர திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை உதவி ஆணையாளர் தனபாலன், கோவில் செயல் அலுவலர் பசவராஜன் தலைமையில் தலைமை எழுத்தர் ராஜீ, திருக்கோவில் பணியாளர்கள், அர்ச்சகர்கள் மற்றும் ஸ்ரீ பூசாரி வேளாளத் தம்பிரான் கட்டளை நிர்வாகிகள் ஆகியோர் செய்து வருகின்றனர்.