உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சீனிவாச பெருமாள் கோவிலில் கல்கருட சேவை கோலாகலம்!

சீனிவாச பெருமாள் கோவிலில் கல்கருட சேவை கோலாகலம்!

கும்பகோணம் : நாச்சியார்கோவில், சீனிவாசப் பெருமாள் கோவிலில், நேற்று முன்தினம் இரவு நடந்த, கல்கருட சேவை நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, தரிசனம் செய்தனர். கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவிலில், வஞ்சுளவல்லி தாயார் உடனாய சீனிவாசப் பெருமாள் கோவில் உள்ளது. புகழ்பெற்ற, 108 வைணவத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இங்கு, மூலவராகவும், உற்சவராகவும், கல்கருட பகவான் அருள்பாலிக்கிறார். இங்கு ஆண்டுதோறும், பங்குனித் தேர்த் திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு, கடந்த மாதம், 29ம் தேதி, கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. விழா நாட்களில், நாள்தோறும் காலை பல்லக்கிலும், மாலை பல்வேறு வாகனங்களிலும், பெருமாள், தாயார் வீதியுலா நடக்கிறது. நேற்று முன்தினம் மாலை, 7 மணிக்கு, உலக பிரசித்தி பெற்ற கல்கருட சேவை நிகழ்ச்சி நடந்தது. இரவு, 9.30 மணிக்கு, பெருமாள் கல்கருட வாகனத்திலும், தாயார் வெள்ளி அன்னப்பட்சி வாகனத்திலும், வீதியுலா வந்து அருள்பாலித்தனர். 9ம் நாள் விழாவான தேரோட்டம், 6ம் தேதி காலை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, நிர்வாக அதிகாரி தக்கார் ராதாகிருஷ்ணன், பொன்னழகு மற்றும் கோவில் பணியாளர்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !