தர்மபுரி பச்சியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
தர்மபுரி: தர்மபுரி பச்சியம்மன் கோவிலில், நேற்று 11ம் தேதி நடந்த கும்பாபிஷேகத்தில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தர்மபுரி, எஸ்.வி.ரோட்டில், பழமை வாய்ந்த பச்சியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், 19 ஆண்டுகளுக்கு பின், நேற்று 11ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி, கடந்த, 8 காலை, 9:00 மணிக்கு, கொடியேற்றம், 10:00 மணிக்கு கங்கனம் கட்டும் நிகழ்ச்சி நடந்தது.
மாலை, 5:00 மணிக்கு, முதல்கால யாகசாலை பூஜை மற்றும் அபிஷேக அலங்காரங்கள் நடந்தன. 9 காலை, 9:00 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது. இரவு, 7:00 மணிக்கு, அம்மன் உற்சவர் வீதிஉலா நடந்தது. நேற்று முன்தினம் காலை, 11:30 மணிக்கு, திரளான பக்தர்கள் பங்கேற்ற பால்குட ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து, பச்சியம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது.
இரவு, 8:00 மணிக்கு, நான்காம் கால யாகபூஜை நடந்தது. நேற்று 11ம் தேதி காலை, 8:00 மணி க்கு, இக்கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை, ஊர்மக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.