குன்றத்தில் செப்.27ல் வேல் எடுக்கும் விழா
திருப்பரங்குன்றம்: நக்கீரருக்கு சாப விமோசனம் கொடுக்க சுப்பிரமணிய சுவாமி தன் கரத்திலுள்ள வேல்மூலம் மலைமீது பாறையில் கீறி, கங்கைக்கு நிகரான தீர்த்தத்தை சுனையில் உருவாக்கியதை நினைவு கூறும் வகையில் திருப்பரங்குன்றத்தில் வேல் எடுக்கும் விழா செப்., 27 நடக்கிறது. அன்று மூலவர் கரத்தில் உள்ள வேல் சிறப்பு அபிஷேகங்களுக்கு பின் மலர்களால் அலங்கரிக்கப்படும். சிறப்பு பூஜை முடிந்து கிராமத்தினருக்கு மரியாதை செய்யப்பட்டு வேல் பல்லக்கில் வீதி உலா சென்று மலைக்கு கொண்டு செல்லப்படும். அங்கு, சுப்ரமணியர் கரத்தில் சேர்ப்பிக்கப்படும்.
உச்சி காலத்தில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி, பஞ்சலிங்கம், நந்தி, சண்டிகேஸ்வரர், கால பைரவருக்கு பூஜை முடிந்து, சிவாச்சார்யார்களால் வேல், சுனை தீர்த்தத்திற்குள் எடுத்துச் செல்லப்பட்டு அபிஷேகம் நடக்கும். கிராமத்தினர் சார்பில் 105 படி அரிசியினாலான கதம்ப பிரசாதம் வழங்கப்படும். மாலையில் வேல் புறப்பாடாகி, மலை அடிவாரத்தில் எழுந்தருளியுள்ள பழனி ஆண்டவர் கரத்தில் சேர்ப்பிக்கப்படும். இரவு வேல், சுவாமிக்கு அபிஷேகம், தீபாராதனைகள் நடக்கும். பின் பூ பல்லக்கில் வேல் வீதி உலா முடிந்து மூலவர் கரத்தில் சேர்ப்பிக்கப்படும்.