விருதுநகர் முருகன் கோயில்களில் கந்தசஷ்டி துவங்கியது
விருதுநகர் : மாவட்டத்தில் முருகன் கோயில்களில் காப்பு கட்டுதலுடன் கந்தசஷ்டி விழா துவங்கியது. முருக பெருமானுக்கு விசேஷமான கந்த சஷ்டி விழா நேற்று துவங்கிது. பக்தர்கள் காப்புக் கட்டி விரதத்தை துவக்கினர். மாவட்டத்தில் முக்கிய முருகன் கோயில்களான விருதுநகர் வாலசுப்ரமணிய சுவாமி கோயில் உட்பட அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை , வீதி உலா நடந்தது. இதில் திராளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ராஜபாளையம்: மாயூரநாதசுவாமி கோயில் சிறப்பு பூஜைகளுடன் மாலையில் முருகன் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோயில், தெற்கு வெங்காநல்லூர் சிதம்பரேஸ்வரர் கோயில், சொக்கர் கோயில், சஞ்சீவி மலை குமார சுவாமி கோயில், அம்பல புளி பஜார் சுப்பிரமணியர் திருக்கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் மடவார்வளாகம் வைத்திநாதசுவாமி கோயிலில் நேற்று மாலை 6:00 மணிக்கு சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் பூஜைகளை ரகுபட்டர் செய்தார். வெள்ளியங்கி சாற்றபட்டது. அப்போது திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதையடுத்து இரவு 7:30 மணிக்குமேல் முருகன், வள்ளி, தெய்வானை ரதவீதி எழுந்தருளினர். தினமும் மாலையில் சிறப்பு பூஜை, அலங்காரம், வீதியுலாவும், நவ,2 மாலை 5:00 மணிக்கு சூரசம்ஹாரம், நவ.3 மாலை 6 :00மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு காசி விஸ்வநாதர் கோயிலில் கந்தசஷ்டி விழா முன்னிட்டு மாலை 6:30 மணிக்கு சுப்பிரமணியசுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கந்தசஷ்டி விழாவின் சார்பில் அமைப்பாளர் கதிரேசன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.