தமிழ்ப்புத்தாண்டு பிரார்த்தனை!
*தாமரைக் கண்களைக் கொண்ட திருமாலின் துணைவியே! அவனது உள்ளத்தாமரையில் மகிழ்ச்சியோடு வீற்றிருக்கும் இன்பவடிவே! கற்புநெறி தவறாத குலமாதரின் நெற்றியில் குங்குமமாய்த் திகழ்பவளே! தவஞானியர் நெஞ்சில் உறைபவளே! உலகத்தின் கண்மணியாய் விளங்குபவளே! திருமகளே! என்மீது கருணை புரிய இதுவே தக்க தருணம் அம்மா!
*செந்தாமரை மலரில் வீற்றிருப்பவளே! திருமாலின் மார்பில் கொலுவிருப்பவளே! பசுவின் கோமயத்தில் குடிகொண்டவளே! மாவிலைத் தோரண வாசலில் நிறைந்துஇருப்பவளே! மங்கலம் மிக்க துளசிச்செடியில் உறைந்திருப்பவளே! இனிய சொற்களைப் பேசும் நல்லோரின் நாவில் இருப்பவளே! தூயவளே! எல்லோரும் இன்புற்று வாழ அருள்புரிவாயாக.
*செல்வத்திருமகளே! பாற்கடல் அமுதோடு பிறந்தவளே! பார்கவ முனிவரின் மகளாக அவதரித்த பார்கவியே! வெற்றியைத் தந்திடும் தைரியலட்சுமியே! உயிர்களுக்குஎல்லாம் குறைவில்லாமல் உணவைத் தந்து உலகைக் காக்கும் அன்னலட்சுமித்தாயே! அடியேனின் தலை மீது உன் திருவடிகளை வைத்துக் காத்தருள்வாயாக.
* அறியாமையால் சிறுபிள்ளைகளான நாங்கள் செய்த பிழைகளைப் பொறுத்துக் கொள்ளவேண்டும் தாயே! வீட்டின் தலைவாசலில் விட்டு நீங்காமல் தங்கியிருந்து,
என்றென்றும் எங்கள் குலம் தழைக்கச் செய்வாயாக. சந்திரனோடு உடன்பிறந்த சுந்தரியே! பால்பாக்கிய யோகத்துடன் வாழ வழிகாட்டுவாயாக.
* அஷ்ட ஐஸ்வர்யத்தையும் வழங்குபவளே! பொன் பொருளைக் குறைவில்லாமல் தருபவளே! வில்வமரத்தில் வாசம் செய்பவளே! மங்களரூபிணியே! வலம்புரிச்
சங்கின் அம்சமாகத் திகழ்பவளே! தீபத்தின் சுடராய் ஒளிர்பவளே! உண்மை பேசும் உத்தமர்களின் உள்ளத்தாமரையில் உறைபவளே! சுவர்ணவல்லித்தாயே! வாசனைத் திரவியங்களை விரும்பி ஏற்பவளே! கஜலட்சுமியே! உன் கடைக்கண் பார்வையால் எங்கள் வீட்டில் செல்வவளம் பெருகட்டும்.
* மூவுலகங்களையும் கடைக்கண்களால் பரிமளிக்கச் செய்யும் தாயே! அமுதம் நிறைந்த குடத்தை ஏந்தி வருபவளே! பாற்கடலில் பிறந்த பூம்பாவையே! வானில் திரண்டிருக்கும் நீல மேகம் போல கரிய திருமால் விரும்பும் பெண் மானே! இளவஞ்சிக் கொடியே! அலைமகளே! எங்களுக்கு உடல் நலமும், மனவலிமையும், நிம்மதியான வாழ்வும், நிலையான புகழும் தந்தருள்வாயாக.
நந்தன ஆண்டில் செல்வம் தருபவர்: நவக்கிரக நாயகர்களில் ஒருவரான சுக்கிரன், நந்தன புத்தாண்டின் ராஜாவாக விளங்குகிறார். இவர் தஞ்சாவூர் மாவட்டம் கஞ்சனூரில் அருள்பாலிக்கிறார். இவரை வழிபட்டால் புத்தாண்டு செல்வ வளம் மிக்கதாக அமையும். கஞ்சனூர் அக்னீஸ்வரர் கோயிலில் அம்பிகைக்கே சக்தி அதிகம். மதுரையில் மீனாட்சி, சுவாமிக்கு வலப்புறம் இருப்பது போல், இங்கும் கற்பக நாயகி, சுவாமியின் வலப்புறம் இருக்கிறாள். பிரம்மாவுக்கு சுவாமியும், அம்பிகையும் திருமணக்காட்சி கொடுத்த இடம். இங்கு வழிபட்டவர்க்கு விரைவில் மணவாழ்வு கிடைக்கும். மற்ற கோயில்களில் அம்பாள், சுவாமியை வேண்டி, திருமணம் செய்ததாக வரலாறு இருக்கும். இங்கே சுவாமி, அம்பிகையை வேண்டி திருமணம் செய்து கொண்டார். எனவே, ஆண்களின் கோரிக்கைகளுக்கு உடனடி நிவாரணம் கிடைப்பதாக நம்பிக்கை. மானக்கஞ்சாற நாயனார் இத்தலத்தில் பிறந்தவர். இறைவனுக்காக புதுப்பெண்ணான, தன் மகளின் கூந்தலையே அறுத்து கொடுத்து சிவனருள் பெற்றவர் இவர். சுக்கிரனின் கதை: அந்தகாசுரன் என்பவன் தேவர்களை துன்புறுத்தினான். எனவே, தேவர்கள் அவனை அழிக்க முற்பட்டனர். அசுரர் தரப்பில் உயிர்ச்சேதம் கடுமையாக இருந்தது. அப்போது அசுரர்களின் குருவாக இருந்த பார்க்கவ முனிவர், சிவபெருமானை நோக்கி தவமிருந்து சஞ்சீவி மந்திர வரம் பெற்றார். இவ்வரம் மூலம் இறந்த அசுரர்களை பிழைக்க வைத்தார். அவர்களது அட்டகாசம் அதிகரித்தது. தேவர்கள் சிவனை சரணடைய, சிவன் பார்க்கவரை விழுங்கி விட்டார். வயிற்றுக்குள் சென்ற பார்க்கவர், அங்கும் தவமிருந்தார். வயிற்றுக்குள்ளேயே கிடந்ததால் அவரது உடல் வெள்ளை ஆயிற்று. எனவே அவர் சுக்கிரன் (வெள்ளையன்) எனப்பட்டார். தவத்தின் வலிமையால் சிவனருள் பெற்று வயிற்றில் இருந்து மீண்டார். மீண்டும் அசுர குருவானார். மகாபலி மன்னனுக்கு குருவாக இருந்து, விஷ்ணுவால் ஒரு கண்ணை இழந்தார். காசிக்கு சென்ற இவர் விஸ்வநாதரை வழிபட்டு, நவக்கிரக மண்டலத்தில் இடம் பெற்றார். கஞ்சனூர் கோயிலில் சுக்கிரனுக்கு தனி சந்நிதி உள்ளது. அனைத்து செல்வமும் அருள்பவர்களாக அக்னீஸ்வரரும், கற்பகநாயகியும் விளங்குகின்றனர்.
இருப்பிடம்: கும்பகோணத்தில் இருந்து சூரியனார்கோவில் சென்று அங்கிருந்து 3 கி.மீ., தூரம்.
நல்ல பொழுதாக அமையட்டும்: * ஒவ்வொரு நாளும் இன்றைய பொழுது நல்லபொழுதாக அமைய வேண்டும் என்று மனப்பூர்வமாக இறைவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள்.
* பணிகளைத் தொடங்கும் முன், இரண்டு நிமிடங்களாவது கடவுளை மனத்தில் சிந்தித்த பின் அன்றாடக் கடமைகளில் ஈடுபடுங்கள்.
* வழிபாட்டின் போது புண்ணியநதிகள், கோமாதா (பசு), சிரஞ்சீவிகள் (அனுமன், சப்தகன்னியர் ஆகியோரைத் தியானித்தால் மனதால் தூய்மை
பெறுவீர்கள். வாரத்தில் ஒருநாளாவது குடும்பத்துடன் அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்யுங்கள். குழந்தைகளையும் சிறுவயதில் இருந்தே கோயில் வழிபாட்டில் ஈடுபடுத்துங்கள்.
* அக்கம்பக்கத்தில் உள்ளவர்களையும், உறவினர்களையும், நண்பர்களையும் மனதார நேசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
* தினமும் குறைந்த பட்சம் ஒரு கைபிடி அரிசியாவது ஏழைகளுக்காக தர்மம் செய்யுங்கள். காகம், பசு, நாய், பூனை போன்ற உயிர்களுக்கு ஆகாரம் அளித்த பின் சாப்பாட்டில் அமருங்கள். நீராடிய பின் நெற்றியில் திருநீறு, குங்குமத்தை பக்தியுணர்வுடன் இட்டுக் கொள்ளுங்கள்.
* இரவு படுக்கைக்குச் செல்லும் முன் அன்றைய நாளில் செய்த நல்லவை, கெட்டவைகளைச் சிந்தித்து, உங்களை நீங்களே திருத்திக் கொள்ள முயலுங்கள்.
* இரவில் தூங்கும் முன், இஷ்டதெய்வத்தின் நாமத்தை பக்திப்பூர்வமாக உச்சரிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
-காஞ்சி பெரியவர்