/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
அல் அசா தமிழ் சங்கம் சிறப்பாக நடத்திய பொங்கல் வி
/
அல் அசா தமிழ் சங்கம் சிறப்பாக நடத்திய பொங்கல் வி
ஜன 19, 2026

அல் அசா தமிழ்ச் சங்கம் சிறப்பாக நடத்திய பொங்கல் விழா
அல் அசா சவூதி அரேபியா ஜனவரி 16, 2026, சவுதி அரேபியாவின் அல் அசா நகரில், தமிழர்களின் பாரம்பரிய திருநாளான பொங்கல் விழா, அல் அசா தமிழ்ச் சங்கம் சார்பில் மிகுந்த கோலாகலத்துடன் கொண்டாடப்பட்டது. தமிழ்ப் பண்பாட்டை போற்றும் விதமாக, பாரம்பரிய உடையணிந்து புதுப்பானையில் பொங்கல் வைக்கும் நிகழ்வுடன் காலை 7.30 மணிக்கு விழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து குழந்தைகளுக்கான விளையாட்டு நிகழ்ச்சிகள், பெரியவர்களுக்கான உறியடித்தல் மற்றும் கயிறு இழுத்தல் போன்ற பாரம்பரிய தமிழர்களின் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
விழா துவக்க நிகழ்ச்சியில் பாரம்பரிய குத்துவிளக்கு ஏற்றி தமிழ்த்தாய் வாழ்த்து பாடி தொடங்கப்பட்டது. அல்-அசா தமிழ்ச் சங்க செயற்குழு உறுப்பினர் முனைவர். நாகராஜன் கணேசன் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, நிகழ்ச்சியில் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் கலந்து கொண்டு தங்களது பல்வகை நடனங்கள், மெல்லிசைப் பாடல்கள் என்று தங்களது தனித்திறமையை வெளிக்காட்டினார்கள். குறிப்பாக குழந்தைகள் ஆடல் மற்றும் யோகா நிகழ்ச்சி பாராட்டுகளைப் பெற்றது.
முத்தாய்ப்பாக, “இன்றைய சூழலில் நகைச்சுவை ஆற்றல் அதிகம் இருப்பது ஆண்களுக்கா? பெண்களுக்கா?” எனும் தலைப்பில் பொங்கல் சிறப்பு பட்டிமன்றம் கவிஞர் எம்.கே. மீரான் தலைமையில் நடைபெற்றது. இதில் “ஆண்களுக்கே” என்ற அணியில் கவிஞர்கள் பெஞ்சமின், ராமமூர்த்தி மற்றும் ராஜ பிரபுவும், “பெண்களுக்கே” என்ற அணியில் கவிஞர்கள் இளைய தேவி, பிருந்தா மற்றும் வாசுகியும் பங்கேற்று தங்களுக்கே உரித்தான பேச்சில் கலகலப்பாக பேசி பார்வையாளர்களைக் கவர்ந்தனர்.
இந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்களாக சவுதி அரேபியத் யுனைடெட் தமிழ் சங்கம் (UTS) பொதுச் செயலாளர் மற்றும் சவூதி கிழக்கு மண்டல NRTIA அமைப்பாளர் எஸ்.கே. எஸ். சிக்கந்தர் பாபு, மற்றும் தமாம் அஞ்சப்பர் உணவக உரிமையாளர் மருத்துவர். வடிவேலு பத்மநாபன், மற்றும் தமாம் மதுரா உணவக உரிமையாளர் முத்து ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார்கள்.
விளையாட்டு போட்டிகளில் வென்ற சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அல் அசா தமிழ்ச் சங்க நிர்வாகிகள் முனைவர். பரமசிவன் மணி-ஷர்மிளா, முனைவர். நாகராஜன் கணேசன்-அருணா, மருத்துவர். சிவகுமார்-அனிதா, பொறியாளர்கள் அருண் பழனிவேல்- ஜனனி, நடராஜன்-தெய்வானை, புதியசாமி, அருண் பாண்டியன்-பூங்கொடி, சதீஷ்- கிரிஜா, திரு ரவூப் மற்றும் முனைவர். ஆயிஷா முக்தர் சிறப்பாக செய்திருந்தனர்
Advertisement

