/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
பள்ளி ஆசிரியர்களுக்கு கத்தார் தமிழர் சங்கம் ஆசிரியர் தின கௌரவம்
/
பள்ளி ஆசிரியர்களுக்கு கத்தார் தமிழர் சங்கம் ஆசிரியர் தின கௌரவம்
பள்ளி ஆசிரியர்களுக்கு கத்தார் தமிழர் சங்கம் ஆசிரியர் தின கௌரவம்
பள்ளி ஆசிரியர்களுக்கு கத்தார் தமிழர் சங்கம் ஆசிரியர் தின கௌரவம்
அக் 02, 2024

ஒவ்வொரு வருடமும் உலகெங்கும் வாழும் இந்தியர்களால் செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. அதை முன்னிட்டு கத்தாரில் பல்லாண்டுகளாக இந்திய மற்றும் தமிழ் மக்களுக்கு பல்வேறு விதங்களில் சமூகப் பணியாற்றிவரும் கத்தார் தமிழர் சங்கம் இந்த வருடமும் ஆசிரியர் தினத்தை கடந்த செப்டம்பர் 14ம் தேதி கத்தாரில் அமைந்துள்ள இந்திய கலாச்சார மையத்தில் வெகு விமர்சையாக நடத்தியது.
ஆசிரியர் தினவிழா என்பதால் கத்தாரில் உள்ள அனைத்து இந்திய பள்ளிகளிலும் பணியாற்றிவரும் ஆசிரியர்கள் அனைவரும் அழைக்கப்பட்டனர். கத்தார் தமிழர் சங்கத்தின் அழைப்பை அன்புடன் ஏற்றுக்கொண்டு நூற்றுக்கும் மேலான ஆசிரியர்கள் தங்கள் குடும்ப சகிதமாக வந்து உற்சாகமாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
ஆசிரியர் தின விழாவுக்கு வந்திருந்த அனைத்து ஆசிரியர்களையும் கத்தர் தமிழர் சங்கத்தின் பொதுக்குழு, துணைக்குழு உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்கள் வாழ்த்தும் வணக்கமும் தெரிவித்து வரவேற்று மகிழ்ந்தனர்.
ஆசிரியர்களை பெருமைப்படுத்தி மகிழ்விக்கும் போக்கில் தொடங்கிய நிகழ்ச்சி, நேரம் போகப்போக ஆசிரியர் ஆசிரியைகளே நிகழ்வில் எவ்வித தயக்கமும் இல்லாது உற்சாகமாக பங்களிப்பு செய்ய ஆரம்பித்ததும் மேடை களைகட்டியது. ஆனந்த அலைவரிசை அரங்கமெங்கும் பரவியது, பார்வையாளர்களையும் பரவசப்படுத்தியது.
ஆடல், பாடல் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற, இடையே தந்திர வித்தைகளை காட்சிப்படுத்தி சிறுவர் சிறுமியரும் ரசித்துக் கொண்டாடி மகிழ ஏறக்குறைய நான்கு மணிநேரத்துக்கு மேலாகவே ஆசிரியர் தின விழா கோலாகலப்பட்டது.
ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் தங்களது வயதை மறந்து, செய்யும் தொழிலை மறந்து தங்கள் மீதான பிம்பத்தை தள்ளிவைத்துவிட்டு தங்களையும் சின்னஞ்சிறு பிள்ளைகளாக பாவித்துக்கொண்டு விளையாடி மகிழ்ந்ததை கண்டுகளித்த பெற்றோர் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் ஆச்சரியம் கலந்த நெகிழ்ச்சியில் ஆனந்தவயப் பட்டனர். மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் கலந்த உணர்ச்சிமயமான விழாவாக இருந்தது.
மேலும் ஆசிரியர்கள் அனைவரும் விழாவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வென்று குவித்தனர். கத்தர் தமிழர் சங்கம் போட்டிகளில் வெற்றிவாகை சூடிய மற்றும் கலந்து கொண்ட அனைத்து ஆசிரியர்களையும் பாராட்டி நினைவுப் பரிசுகளை வழங்கி கௌரவித்தது. நிகழ்வில் பங்கு கொண்ட ஆசிரியகள் எல்லோருமே மிகுந்த மன நிறைவுடன் விடைபெற்ற போது கத்தர் தமிழர் சங்கத்தை வாழ்த்தி நன்றி பாராட்டினர்.
நிகழ்ச்சிக்கு வருகை தந்த ஆசிரியர்கள், அவர்களது குடும்பத்தினர், தன்னார்வலர்கள், கத்தர் தமிழர் சங்கத்தின் ஆதரவாளர்கள் மற்றும் கத்தார் வாழ் தமிழ்ச்சமூகத்துக்கு கத்தார் தமிழர் சங்கம் தனது மனமார்ந்த நேசம் கலந்த நன்றியை தெரிவித்துக் கொண்டது.
- நமது செய்தியாளர் சிவசங்கர். S
Advertisement