/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
ஓமன் கிரிக்கெட்டில் மின்னும் தமிழ் நட்சத்திரங்கள்
/
ஓமன் கிரிக்கெட்டில் மின்னும் தமிழ் நட்சத்திரங்கள்
ஏப் 29, 2025

துபாய்: சமீபத்தில் ஓமன் கிரிக்கெட் கிரிக்கெட் அகாடமியின் 15 வயதிற்கு உட்பட்டோருக்கான பெண்கள் கிரிக்கெட் அணி துபாயில் நடந்த நான்கு நாடுகளுக்கான 'தி ரூட் துபாய் 2025' கோப்பைக்கான தொடரில் கலந்துகொண்டது. ஏப்ரல் 15 முதல் 18 ம் தேதி வரை இத்தொடர் பிரபலமான துபாயில் உள்ள செவன்ஸ் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இத்தொடரில், ஓமான் உட்பட நியூசிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளை சேர்ந்த 15 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கான கிரிக்கெட் அணிகள் கலந்துகொண்டன.
மொத்தம் 14 வீராங்கனைகளை கொண்ட ஓமன் அணி (ஓமன் கிரிக்கெட் அகாடமி பெண்கள்), நியூசிலாந்து (தெற்கு தீவு பெண்கள்), அமெரிக்கா (வட ஜெர்சி பெண்கள்) மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (பாலைவன விரியன்கள்) போன்ற சர்வதேச அணிகளுக்கு எதிராக களமிறங்கியது.
இத்தொடரில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி முதல் இடத்தையும், நியூசிலாந்து அணி இரண்டாம் இடத்தையும், ஓமன் அணி மூன்றாம் இடத்தையும் பிடித்தன. ஓமான் அணிக்காக, தமிழ்நாட்டை சேர்ந்த திஷா பிரதீப், சஹானா ஜீலானி மற்றும் அனிகா ஆஷிக் என்ற மூன்று இளம் வீராங்கனைகள் விளையாடினர். இவர்கள் அனைவரும் இந்த தொடர் முழுவதும் அனைத்து துறைகளிலும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
தொடரை வெற்றிகரமாக நிறைவு செய்தபின் தமிழ்நாட்டை சேர்ந்த மூன்று கிரிக்கெட் நட்சத்திங்களும் துபாயில் விளையாடிய தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
தமிழ் வீராங்கனையான சஹானா ஜீலானி, 15 வயதிற்கு உட்பட்டோருக்கான ஓமான் பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆவார். மற்றொரு தமிழ் வீராங்கனையான அனிகா ஆஷிக், இந்த தொடரின் சிறந்த பந்து வீச்சாளராக தேர்வு செய்யப்பட்டு தமிழகத்திற்கும் ஓமானிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
தொடர் குறித்து திஷா, ஓமானிற்காக நான் விளையாடியதை நினைத்து மிகவும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன் என்று கூறினார். மேலும், இதனை என்னுடைய வாழ்நாள் சாதனையாக கருதுகிறேன் என்றும் ஒருநாள், ஓமான் நாட்டிற்கான பெண்கள் தேசிய அணியிலும், இந்தியாவில் நடைபெறும் பெண்களுக்கான பிரீமியர் லீக்கிலும் விளையாட வேண்டுமென்பது என்னுடைய கனவு என்றும் திஷா கூறினார்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement