sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

அமெரிக்கா

/

செய்திகள்

/

பாடறிவோம் படிப்பறிவோம் - இசைக் குடும்பத்துடன் ஒரு நேர்காணல்

/

பாடறிவோம் படிப்பறிவோம் - இசைக் குடும்பத்துடன் ஒரு நேர்காணல்

பாடறிவோம் படிப்பறிவோம் - இசைக் குடும்பத்துடன் ஒரு நேர்காணல்

பாடறிவோம் படிப்பறிவோம் - இசைக் குடும்பத்துடன் ஒரு நேர்காணல்

3


பிப் 16, 2026

Google News

பிப் 16, 2026

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இசையை எல்லோருக்கும் சொந்தமான ஒன்றாக மாற்றும் உலகளாவிய இசைக்குழுவாக “பாடறிவோம் படிப்பறிவோம்” செயல்பட்டு வருகிறது. 2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, இசை மீது ஆர்வம் கொண்ட சாதாரண மக்களை வழிகாட்டி, தன்னம்பிக்கை மிக்க பாடகர்களாக உருவாக்கும் நோக்கத்துடன் பல்வேறு கற்றல் நிகழ்ச்சிகள் மற்றும் சேர்ந்திசை முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. உலகின் பல நாடுகளில் இருந்து நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள் இணைந்து, இசையின் மூலம் ஒரு குடும்பமாக செயல்பட்டு வருவது இந்த அமைப்பின் சிறப்பாகும்.

இந்த உலகளாவிய இசைக்குழுவின் பயணம், நோக்கம் மற்றும் சாதனைகள் குறித்து, அமெரிக்கா நியூ ஜெர்சியில் வசிக்கும் நமது செய்தியாளர் மேனகா நரேஷ், அமைப்பின் தலைமை மற்றும் உறுப்பினர்களை நேர்காணல் செய்து, அவர்களின் இசைப் பயணத்தை வெளிக்கொணர்ந்துள்ளார்.


இசை என்பது மதம், இனம், மொழி, நாடு என்ற அத்தனை எல்லைகளையும் கடந்து அனைவரையும் ஒன்றிணைக்கும் சக்தி. அந்த இசையை எளிமையாகவும், மக்களுடன் நேரடியாக இணையும் வகையிலும் கொண்டு செல்லும் முயற்சியாக “பாடறிவோம் படிப்பறிவோம்” இசைக்குழு செயல்பட்டு வருகிறது. இசையார்வம் உள்ளவர்களைப் பாடகர்களாக மாற்றும் இவர்களின் நிகழ்வுகள், இசையை ஒரு கூட்டுக் கொண்டாட்டமாகமாற்றுகின்றன. சமீபத்தில் “வந்தே மாதரம்” பாடலின் 150ஆம் ஆண்டு நினைவை உலகளாவிய அளவில் 150 பாடகர்களைப் பங்குபெறச் செய்து கொண்டாடியது இந்தக் குழு.

எல்லோரையும் பாட வைக்கும் இந்த இசைக்குழுவின் பயணம், அவர்களின் எண்ணங்கள், அனுபவங்கள் மற்றும் இசை குறித்த பார்வைகளை அறிந்து கொள்ளும் நோக்கில் இப்பேட்டி அமைகிறது. இந்தப் பேட்டியில், “பாடறிவோம் படிப்பறிவோம்” அமைப்பின் தலைவர்களுள் ஒருவரான நாகேஸ்வரன், அமெரிக்காவில் வசிக்கும் இந்த அமைப்பின் உறுப்பினரும் வழிகாட்டியுமான (மென்டர்) ராஜி கலந்துகொண்டனர்.


வணக்கம் நாகேஸ்வரன்! “பாடறிவோம் படிப்பறிவோம்” அமைப்பு உலகளாவிய இசை சமூகமாக எவ்வாறு செயல்படுகிறது என்பதையும், அதன் நோக்கத்தையும் சுருக்கமாகச் சொல்ல முடியுமா?

“பாடறிவோம் படிப்பறிவோம்” என்பது ஒரு சாதாரண இசை ஆர்வலர் குழு அல்ல — இசையை உலகின் ஒவ்வொரு மூலையிலும் ஒலிக்கச் செய்யும் ஒரு கனவுப் பயணம். “பாத்ரூம் டு க்ரீன்ரூம்” என்பது எங்களின் நோக்கத்தைக் குறிக்கும் வாசகம். குளியலறையில் மனம் திறந்து பாடுபவரை பாடல் ஒலிப்பதிவு அறை வரை அழைத்துச் சென்று, நம்பிக்கையுடன் கலைஞராக உருவாக்குவது எங்கள் நோக்கம். எங்களிடம் சேர்வோரிடத்தில் தேவைப்படுவது ஒரே ஒன்று — இசை மீது உண்மையான ஆர்வம்.


திறமை எந்த நிலையில் இருந்தாலும் பரவாயில்லை; ஆரம்ப நிலை முதல் மேம்பட்ட நிலை வரை யாராக இருந்தாலும் நாங்கள் அன்புடன் வரவேற்கிறோம். ஏனெனில், இசை என்பது சிலருக்கானது அல்ல — ஆர்வம் உள்ள ஒவ்வொருவருக்கும் சொந்தமானது என்பது எங்களின் கருத்து.

மிகச் சிறப்பாக உங்கள் அமைப்பின் நோக்கத்தைப் பகிர்ந்துகொண்டீர்கள் நாகேஸ்வரன்! “பாடறிவோம் படிப்பறிவோம்” அமைப்பு எப்போது உருவானது என்பதைப் பற்றியும் பகிர்ந்து கொள்ள முடியுமா?


“பாடறிவோம் படிப்பறிவோம்” என்னும் எங்களுடைய அமைப்பு 2020 ஆம் ஆண்டு, மே 4 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த அமைப்பை உருவாக்கும் எண்ணம் நான்கு நாட்களில் உருவானது. 2020 ஏப்ரல் மாதத்தில், நான் நடத்தி வந்த “இவன்ட் மேனேஜ்மென்ட்” நிறுவனத்திற்கு ஒரு பெரிய ஒப்பந்தம் கிடைத்தது. அனைத்தும் சுமுகமாக நடைபெற்றுக் கொண்டிருந்த அந்த நேரத்தில், கொரோனா தொற்று பரவல் ஆரம்பமானது. அதன் காரணமாக அந்த வாய்ப்பு கைவிட்டுப் போனது. அது எனக்கு வருத்தத்தை அளித்தாலும், அந்தச் சூழ்நிலையிலிருந்தே புதிய வாய்ப்புகளைச் சிந்திக்க ஆரம்பித்தேன். அந்த நேரத்தில் நாங்கள் சில “கரோக்கி” செயலிகளைப் பயன்படுத்தி வந்தோம். அவற்றை ஆராய்ந்தபோது, பெரும்பாலான மக்களுக்குப் பாட வேண்டும் என்ற ஆவல் இருப்பதை உணர்ந்தேன். ஆனால் நன்றாகப் பாடுவதற்கான சரியான வழிமுறைகள் அவர்களுக்குத் தெரியவில்லை என்பதையும் கவனித்தேன்.திரைப்படப் பாடல்களை எடுத்துக் கொண்டு, அவற்றை முறையாகக் கற்றுக் கொடுத்தால் மக்கள் கற்றுக்கொண்டு பாடுவதற்கான ஒரு நல்ல வாய்ப்பை வழங்கலாம் என்ற யோசனை எனக்குத் தோன்றியது.

இந்த யோசனை உருவாகக் காரணமானவர் என் தோழி சுஷ்மிதா, இசைத்துறையில் அனுபவம் வாய்ந்தவர்; திறமையான பாடகியும் ஆவார். எனக்கே பாடலில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், என் பாடல் பதிவுகளை அவருக்கு அனுப்பித் திருத்தம் கேட்டுக் கொள்வேன். அந்த அளவுக்கு அவருக்கு இசைஞானமும் தேர்ச்சியும் உள்ளது. அவரின் ஊக்கமும் ஆதரவும் இந்த முயற்சிக்கு வலுவான அடிப்படையாக இருந்தது. மக்களுக்கும் இதே வாய்ப்பை வழங்கினால் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பதை நாங்கள் நம்பினோம். அதன் விளைவாகவே “பாடறிவோம் படிப்பறிவோம்” அமைப்பு உருவானது. தொடக்கத்தில், வாரத்திற்கு ஒரு திரைப்படப் பாடலை தேர்வு செய்து அதைக் கற்றுக் கொடுக்கும் முறையில் ஆரம்பித்தோம். பாடம் கற்றுக் கொடுத்த பிறகு, “கரோக்கி” செயலி மூலம் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். கூகுள் படிவத்தை (Google Form) பூர்த்திச் செய்து, தங்களுடைய பாடல் பதிவுகளை எங்களுக்கு அனுப்பலாம். அந்தப் பதிவுகளைக் கேட்டு, தேவையான திருத்தங்களையும் வழிகாட்டுதலையும் வழங்குவது எங்களுடைய வழக்கம்.


நாங்கள் முதலில் கற்றுக் கொடுத்த பாடல் மாயாமாளவகவுளை ராகத்தில் அமைந்த “பூங்கதவே தாழ் திறவாய்”. மேலும், இவ்வாறு கற்றுக் கொடுக்கப்பட்ட 260 பாடல்களையும் “பாடறிவோம் படிப்பறிவோம்” யூடியூப் தளத்தில் பதிவேற்றம் செய்திருக்கிறோம். .

வணக்கம் ராஜி! நீங்கள் அமெரிக்காவில் வசிக்கிறீர்கள். இந்திய குடியரசு தினத்தை இசை மூலம் கொண்டாட வேண்டும் என்ற எண்ணம் எப்போது, எவ்வாறு உருவானது என்பதை விளக்க முடியுமா?


“பாடறிவோம் படிப்பறிவோம்” அமைப்பின் முயற்சி இல்லையெனில் இந்த நிகழ்வு நடைபெற்றிருக்காது. “வந்தே மாதரம்” பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு, அதனை ஒரு குழு இசையாக வழங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அந்த எண்ணத்தைச் செயலாக்குவதற்காக நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு உழைத்தோம். 150 குரல்களை ஒரே குரலாக ஒலிக்கச் செய்வது சாதாரண விஷயம் அல்ல.

இந்த முயற்சியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாகத் நாகேஸ்வரன், சுஷ்மிதா மற்றும் கௌசிக் ஆகியோரைக் குறிப்பிட வேண்டும். திட்டத்தை எவ்வாறு செயல்படுத்துவது, எவ்வாறு கற்றுத்தருவது, பாடகர்களை எவ்வாறு ஒருங்கிணைப்பது போன்ற அனைத்தையும் அவர்கள் சிறப்பாக மேற்கொண்டார்கள். குழுக்கள் உருவாக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவிற்கும் இரண்டு வழிகாட்டிகள் (மென்டர்கள்) நியமிக்கப்பட்டனர். ஒவ்வொரு குழுவிலும் இருக்கும் 20-25 பாடகர்களுக்குத் தொடர்ந்து பயிற்சி அளித்து, இந்த முயற்சியை வெற்றிகரமாக நிறைவேற்றினோம். இந்த மொத்தப் பெருமையும் “பாடறிவோம் படிப்பறிவோம்” அமைப்பையே சேரும்.


நாகேஸ்வரனுக்கு இந்தக் கேள்வி. “வந்தே மாதரம்” பாடலின் 150ஆம் ஆண்டு நினைவை உலகளாவிய அளவில் கொண்டாடத் தேர்ந்தெடுத்ததன் பின்னணி என்ன?

“பாடறிவோம் படிப்பறிவோம்” அமைப்பில் ஒரு மியூசிக் கிளப் செயல்பட்டு வருகிறது. இதில் 26 நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் இணைந்துள்ளனர். இந்த உறுப்பினர்கள் அனைவரையும் நாங்கள் ஒரு குடும்பமாகவே கருதுகிறோம். பெங்களூரில் வசிக்கும் உறுப்பினரான ரவி, “வந்தே மாதரம்” பாடலின் 150ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, 150 பாடகர்களைக் கொண்டு இந்தப் பாடலை சேர்ந்திசையாக வழங்கலாம் அல்லவா?” என்ற அருமையான யோசனையை முதன்முதலில் முன்வைத்தார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அவர் இந்த யோசனையைப் பகிர்ந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து, அனைவரின் ஒத்துழைப்புடன் இந்த முயற்சியை நாங்கள் தொடங்கினோம்.


உலகின் பல நாடுகளில் இருந்து 600-க்கும் மேற்பட்ட பாடகர்கள் இதில் ஆர்வம் காட்டிய நிலையில், 150 பாடகர்களைத் தேர்வு செய்த நடைமுறை எப்படி இருந்தது என்பதைப் பற்றி விளக்க முடியுமா நாகேஸ்வரன்?


எங்களிடம் 26 நாடுகளில் இருந்து மொத்தம் 600 உறுப்பினர்கள் உள்ளனர். பாடகர்களைத் தேர்வு செய்யும் போது சமமான நிலைப்பாடு இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். பெண்களும் இணைக்கப்பட வேண்டும், குழந்தைகளுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதும் எங்களது முக்கிய நோக்கமாக இருந்தது. 600 உறுப்பினர்களில் உண்மையான ஆர்வம் கொண்டவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள் என்பது ஒரு பெரிய கேள்வியாக இருந்தது. அதனால் முதலில் அனைவருக்கும் ஒரு படிவம் (Form) அனுப்பி, ஆர்வம் இருப்பதைத் தெரிவிக்கக் கேட்டோம். அதற்கு 365 பேர் பங்கேற்க விருப்பம் தெரிவித்தனர். இந்த 365 பேரில் சிலர் தொடர்ந்து எங்களது முயற்சிகளில் ஈடுபடாமல் இருப்பதைக் கவனித்தோம். அவர்களுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு, “நீங்கள் நிச்சயமாகத் தொடர்ந்து இந்த நிகழ்வில் பங்கேற்க முடியுமா?” என்று உறுதிப்படுத்திக் கேட்டோம். இந்த உறுதிப்பாட்டின் பின்னர், பலர் தாங்களாகவே விலகிக் கொண்டனர்.

மீதமுள்ளவர்களில் தொடர்ச்சியாக ஆர்வமுடன் பங்கேற்கும் 160 முதல் 170 பேரை அடையாளம் கண்டோம். இவர்களை நான்கு குழுக்களாகப் பிரித்தோம். இறுதியில் 153 பேர் உறுதியாகத் தொடர்ந்தனர். அதிலிருந்து மேலும் 6 பேர் உடல்நலக் காரணங்களால் விலகினர். அதனால் வெளியில் இருந்து 3 பேரை இணைத்து, மொத்தம் 150 பாடகர்களை இறுதியாகத் தேர்வு செய்தோம்.பாடலின் பகுதிகளை, நான்கு குழுக்களுக்கும் பிரித்து வழங்கினோம். ஒவ்வொரு குழுவுக்கும் 2 முதல் 4 வரை மென்டர்கள் நியமிக்கப்பட்டனர்.


முதலில் அனைவருக்கும் சரியான உச்சரிப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது. அதற்காக குரல் பதிவுகளும் வழங்கப்பட்டன. கூடுதலாகச் சிறப்புக் கவனிப்புத் தேவைப்படும் பாடகர்களைத் தனியாகத் தேர்வு செய்து, அவர்களுக்குத் தனிப்பட்ட முறையில் பயிற்சியும் வழங்கப்பட்டது. ஒவ்வொரு குழுவிலிருந்தும் 4 முதல் 5 பாடகர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட பகுதிகளை முதலில் பாடி பதிவு செய்தனர். பின்னர் மற்ற உறுப்பினர்களின் குரல்களும் பதிவு செய்யப்பட்டன. இவ்வாறு நான்கு குழுக்களின் ஆடியோ மற்றும் வீடியோ பதிவுகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு, எடிட்டிங் பணிகள் முடிக்கப்பட்டு, குறிப்பிட்ட நேரத்தில் எங்களது படைப்புத் தயாரிக்கப்பட்டது. இந்த நிகழ்வை வெற்றிகரமாக நடத்த உதவிய எடிட்டர் ஆனந்துக்கு இந்நேரத்தில் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அனைவரும் ஒரே குடும்பமாக இணைந்து செயல்பட்டதன் பலனாக, இந்த நிகழ்வு “பாடறிவோம் படிப்பறிவோம்” இசைக் குழுமத்தின் ஒரு சிறப்பான வெற்றியாக அமைந்தது என்று நாங்கள் பெருமையுடன் கருதுகிறோம்.

ராஜி இது உங்களுக்கான கேள்வி. அமெரிக்காவில் இருந்து 15-க்கும் மேற்பட்ட பாடகர்கள் இந்த முயற்சியில் பங்கேற்றது குறித்து உங்கள் உணர்வுகள் என்ன?


உண்மையில் நம்முடைய நாட்டையும், குடும்பத்தையும் விட்டு வெகு தொலைவில், அமெரிக்காவில் வசிக்கும் சூழலில் அமெரிக்காவில் இருந்து 15-க்கும் மேற்பட்ட பாடகர்கள் இந்த முயற்சியில் பங்கேற்றது மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது . அமெரிக்காவில் இருப்பதால் இசை நிகழ்ச்சிகளில் நேரடியாகக் கலந்துகொண்டு பாடுவதற்கான வாய்ப்புகள் பெரும்பாலும் எங்களுக்குக் கிடைப்பதில்லை. இணையம் வழியாகப் பாட வாய்ப்புகள் இருந்தாலும், நேரடியாகப் பாடும் மகிழ்ச்சியை அனுபவிப்பது கடினம். “பாடறிவோம் படிப்பறிவோம்” அமைப்புக்கென்று தனியாக ஒரு அமெரிக்க வாட்ஸ் அப் குழுமம் உள்ளது. அதில் நாங்கள் ஒரு குடும்பமாக இணைந்து செயல்படுகிறோம் என்பதைப் பார்க்கும் போது மனம் நிறைந்து மகிழ்ச்சி உண்டாகிறது.

அவ்வப்போது நாங்கள் நேரடியாகச் சந்தித்து எங்கள் இசை நிகழ்ச்சிகளை வழங்குவோம். இப்படிப் பல ஊர்களுக்குச் சென்று பாடும்போது ஒரு குடும்பமாகப் பயணம் செய்யும் அனுபவத்தை நாங்கள் உணர்வோம். அமெரிக்காவில் வாரம் முழுதும் வேலைக்காக ஓடுவோம், பிறகு வார இறுதியில் பிள்ளைகளுக்காக ஓடுவோம்; ஆனால் “பாடறிவோம் படிப்பறிவோம்” எங்களுக்கான நேரத்தை எப்போதும் கொடுக்கிறது. இல்லையேல், நாங்கள் இயந்திரமாகவே இயங்கிக் கொண்டிருப்போம். இசையால் இணைந்த இந்தக் குடும்பம் பல பாடகர்களுக்கும் ஒரு வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.


எந்தவொரு பாடலையும் எவ்வாறு பாடகர்களுக்குப் புரியும் வகையில் சொல்லித் தருகிறீர்கள் என்பதைக் குறித்து விளக்க முடியுமா நாகேஸ்வரன் ?

“பாடறிவோம் படிப்பறிவோம்” இதுவரை வெளியிட்டக் கற்றல் காணொளிகளைப் பார்த்தால் உங்கள் கேளவிக்எஆனவிடைக் கிடைக்கும். இந்தக் காணொளிகள், பாடலை அணுகும் முறையை நமக்குத் தெளிவாகக் காட்டும் ஒரு பாடலின் ஒவ்வொரு வரியிலும் உள்ள நுணுக்கங்களை நாங்கள் விரிவாக விளக்குவோம். எங்கள் ஒவ்வொரு மெண்டருக்கும் தனித்துவமான பாணி உள்ளது. உதாரணமாக, கவுசிக கர்நாடிக் இசையில் சிறந்த தேர்ச்சியைக் கொண்டவர். அதேபோல், சுஷ்மிதா கர்நாடிக் மற்றும் லைட் மியூசிக் இரண்டிலும் நிபுணர். பாடல் வரிகளை எடுத்துக் கொண்டு, ஒவ்வொரு வரியையும் முறையாகப் பிரித்து, அதிலுள்ள கமகங்களைத் தாளத்திற்கு ஏற்ப எளிதாகப் பாடகர்களுக்குப் புரியும் வகையில் விளக்குவோம். இவ்வாறு சொல்லிக் கொடுப்பதால், கற்றுக்கொள்ளும் பாடகர்களுக்கும் பாடலை ஆழமாகப் புரிந்து கொள்ளும் வாய்ப்பு உருவாகிறது.


திருத்தங்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் பாடகர்களிடம் உள்ளதா? இதைப்பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் நாகேஸ்வரன்.

திருத்தங்களைச் சொல்லும் போது அதனால் மனவருத்தம் அடையும் நபர்களையும் நாங்கள் பார்த்திருக்கிறோம். அதேபோல், திருத்தங்களைப் பக்குவத்துடன் ஏற்றுக் கொள்ளும் பாடகர்களையும் பார்த்திருக்கிறோம். தவறாகப் பாடுபவர்களுக்குத் தனியாகக் குறுஞ்செய்தி அனுப்பி அவர்களுடைய குறைகளைச் சுட்டிக்காட்டுவோம். இந்த வகையில் அவர்களுடைய மனம் புண்படாத வகையிலேயே செயல்படுவோம். ஆனால், எங்களது நீண்ட இசைப் பயணத்தில், அனைவரையும் திருப்திப்படுத்துவது கடினம் என்பதை நாங்கள் நன்றாகப் புரிந்து கொண்டுள்ளோம். இருந்தாலும், எங்களது கடமையைச் செய்யும் பணியில் ஒருபோதும் தவறியதில்லை.


“பாட்டு பராக்” என்ற வித்தியாசமான பாடல் போட்டியை நாங்கள் ஐபிஎல் (IPL) முறைப்படி நடத்தி வருகிறோம். கடந்த ஆண்டு நடைபெற்ற இந்தப் போட்டியின் இறுதிச்சுற்றுக்குப் பிறகு, சில பாடகர்கள் நடந்துகொண்ட விதம் எங்களுக்கு மிகுந்த மனவருத்தத்தை அளித்தது. இருப்பினும், அந்த எல்லாத் தடங்கல்களையும் கடந்து, இன்றளவும் எங்கள் இசைப் பயணத்தை உறுதியாகத் தொடர்ந்து வருகிறோம்.

நாகேஸ்வரன், குறுகிய காலத்தில் இத்தனை பெரிய அளவிலான இசை முயற்சியை வெற்றிகரமாக முடிக்க உதவிய முக்கியக் காரணிகள் என்ன என்பதைச் சொல்ல முடியுமா ?


நாங்கள் எங்களுடைய நிறுவனத்தை வெறும் நான்கு நாட்களில் தொடங்கினோம். கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு முக்கியச் சாதனைகளைப் படைத்திருக்கிறோம். அவற்றில் சிறப்பான ஒன்று - 108 மணி நேரம் இடைவிடாமல் சென்னை விமான நிலையம் வரவேற்புத் தளத்தில் நடைபெற்ற தொடர்ச்சியான இசை நிகழ்ச்சி. நான்கு நாட்கள் தொடர்ந்து, எந்த இடைவெளியும் இன்றி இந்த நிகழ்ச்சியை நடத்தி, அதன் மூலம் 17 லட்சம் ரூபாய் நிதி திரட்டி, மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வழங்கியுள்ளோம். “வந்தே மாதரம்” பாடலின் 150ஆம் ஆண்டு நினைவைக் கொண்டாடிய எங்கள் சேர்ந்திசையின் வெற்றிக்கு முக்கியக் காரணங்களாக நான் கருதுவது, எங்களுடைய குழுவின் ஒற்றுமை, அர்ப்பணிப்புடன் செயல்படும் உறுப்பினர்கள், தன்னம்பிக்கை மற்றும் நேர்மறையான எண்ணங்கள். இதற்கு என் வாழ்க்கையே ஒரு உதாரணம். 2023 ஆம் ஆண்டு எனக்கு 'கில்லியன் பாரி ஸிண்ட்ரோம்' (Guillain-Barré Syndrome) எனும் கடுமையான நரம்பியல் நோய் தாக்கியது. அதன் விளைவாக எனக்குப் பராலிசிஸ் ஏற்பட்டது. 10 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். இன்னும் ஆறு மாதங்கள் நடக்க முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். என் வாயின் செயல்பாடும் 30% மட்டுமே இருந்தது. ஆனால், நான் பேசவும் பாடவும் வேண்டும் என்ற உறுதி என்னை முன்னேற்றியது. நோய் தாக்கி 45 நாட்களுக்குள், நான் நான்கு மணி நேர இசை நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினேன். மேடைக்கு நானே நடந்து சென்று, அங்கு நின்று நிகழ்ச்சியை நடத்தினேன். அது என் வாழ்க்கையின் மறக்க முடியாத தருணமாகும். இந்த 45 நாட்களின் அனுபவத்தை மின்புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளேன். அதில் என் உடல்நிலை பற்றிய சுயபச்சாதாப வரிகள் இல்லை. மாறாக, 40 ஆண்டுகள் கழித்து என் தாயின் மடியில் மீண்டும் படுத்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்த அதிர்ஷ்டம், என் மனைவி என்னைப் பார்த்துக் கொண்ட விதம், எனக்குப் பிடித்த திரைப்படங்களைத் தொடர்ந்து பார்த்த அனுபவம், நல்ல உணவு, நல்ல உறக்கம் — இவற்றை அனைத்தையும் நேர்மறையாகப் பதிவு செய்துள்ளேன்.
என் தாயிடமிருந்தே எனக்குத் தன்னம்பிக்கை, விடாமுயற்சி, மற்றும் எந்தச் சூழ்நிலையையும் நேர்மறையாக அணுக வேண்டும் என்ற சிந்தனை உருவானது. அதுவே இன்று வரை என்னை முன்னேற்றிக் கொண்டிருக்கிறது.

எதிர்காலத்தில் இதுபோன்ற உலகளாவிய இசை முயற்சிகளைத் தொடரும் திட்டம் உள்ளதா? இருந்தால், அதைப் பற்றிப் பகிர முடியுமா?


ஒரு மிகப் பெரிய அளவில் சேர்ந்திசை நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிருக்கிறது. ஐந்தாயிரம் முதல் ஆறாயிரம் பாடகர்களை இணைத்து இந்தச் சேர்ந்திசையை நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கம் எங்களுக்கு உள்ளது.அந்த ஐந்தாயிரம் பாடகர்களுக்கும் முறையாகப் பயிற்சி அளித்து, இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் சென்னையில் ஒரு இசைத் திருவிழாவாக இதை நடத்த வேண்டும் என்பதே எங்களின் பெரிய கனவு. அந்த இலக்கை நோக்கி எங்களுடைய முயற்சிகள் தொடர்ந்து நடைபெறும்.

“பாடறிவோம் படிப்பறிவோம்” இசையை எல்லோருக்கும் சொந்தமான ஒன்றாக மாற்றியுள்ள ஒரு உலகளாவிய இயக்கம். ஆர்வமுள்ள எவரையும் பாடகராக உருவாக்கும் அவர்களின் முயற்சி, 150 குரல்களுடன் “வந்தே மாதரம்” நினைவு நிகழ்வை வெற்றிகரமாக கொண்டாடியதில் உச்சத்தைத் தொட்டது. ஒற்றுமை, அர்ப்பணிப்பு, தன்னம்பிக்கை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, ஆயிரக்கணக்கான குரல்களை இணைக்கும் அவர்களின் எதிர்கால கனவு மேலும் பலரைக் கவரும் என்பதில் சந்தேகமில்லை. “பாடறிவோம் படிப்பறிவோம்” இசைக் குடும்பத்தினருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!


இசையின் மூலம் இதயங்களை இணைக்கும் பயணம் தொடர்ந்து உயரங்கள் தொட “தினமலர்” சார்பில் வாழ்த்துகிறோம்.

- அமெரிக்காவிலிருந்து நமது செய்தியாளர் முருகவேலு வைத்தியநாதன்


https://drive.google.com/file/d/1YJDhwIVr6F2FnSn9Wy9FRram28ofWEN0/view?usp=drive_link


Advertisement

Advertisement


Sharma

பிப் 19, 2026 20:27

வாழ்த்துகள் நாகு பாய் + குழுவினர்

Rate this


Ramesh Krishnan

பிப் 17, 2026 18:02

வாழ்த்துகள்.

Rate this


Ramesh Krishnan

பிப் 17, 2026 17:58

நல் முயற்சி. நானும் இதில் ஓர் உறுப்பினர். வாழ்க.வளர்க.

Rate this



வாழ்த்துகள் நாகு பாய் + குழுவினர்

Rate this


Ramesh Krishnan

பிப் 17, 2026 18:02

வாழ்த்துகள்.

Rate this


Ramesh Krishnan

பிப் 17, 2026 17:58

நல் முயற்சி. நானும் இதில் ஓர் உறுப்பினர். வாழ்க.வளர்க.

Rate this


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us