உள்ளூர் செய்திகள்

பச்சைப்புடவைக்காரியின் கொத்தடிமை - 50

குருவாக வந்தவள்அது கனவா, நனவா தெரியவில்லை. பச்சைப்புடவைக்காரி உருவெளிப்பாடாகத் தோன்றினாள்.“கற்க வேண்டியவற்றைக் கற்று விட்டேன். பெரிய முனிவரிடம் உங்களுடைய உபாசனா மந்திரங்களைக் கற்க ஆசை...”“அதைவிட முக்கியமான ஒன்றைக் கற்றுத் தருகிறேன். அந்தக் காட்சியைப் பார்”ராஜேந்திரன் ஒரு பெரிய நிறுவனத்தின் மேலாளர். நேர்மையானவர். திறமைசாலி. அந்த நிறுவனத்தின் பொது மேலாளர் பதவி ராஜேந்திரனுக்குத் தான் கிடைக்கும் என எல்லோரும் எதிர்பார்த்தனர். அவர் மனைவி லதாவும்தான். “பெரிய பதவியைக் கொடுக்கப் போறா பச்சைப்புடவைக்காரி. மீனாட்சி கோயிலுக்குப் போய்ட்டு வந்துருவோம்ங்க”கோயிலில் நல்ல தரிசனம். ராஜேந்திரனுக்குப் பதவி உயர்வு கிடைத்ததும் மீனாட்சிக்குப் புடவை சாற்றுவதாக வேண்டிக்கொண்டாள் லதா. ராஜேந்திரனோ அம்மனின் முன் கண்ணீர்மல்க நின்றிருந்தார்.அந்த நிறுவனத்தின் சென்னைக் கிளையில் மேலாளராக இருந்த சிவா என்ற இளைஞனுக்குப் பொது மேலாளர் பதவி கொடுக்கப்பட்டது. இன்னொரு மேலாளரான வாசுதேவன், ராஜேந்திரனிடம் சண்டை போட்டார்.“தலைவர் பொசுக்குன்னு ஒரு முப்பது வயசுப் பையனை ஜி.எம்., ஆக்கிட்டாரே''“தெரியுமே”“சிவாவுக்குப் படிப்பு கிடையாது. அனுபவமும் குறைச்சல்தான்'' “அவன்தான் சரியான ஆளுன்னு தலைவர் நினைக்கறாரு”“நீங்க சரியான ஆளுய்யா.. பேசாம வேலையை ராஜினாமா பண்ணுங்க. அப்போதான் தலைவருக்கு அறிவு வரும்” “இருபது வருஷத்துக்கு முன்னால இந்தக் கம்பெனில குமாஸ்தா வேலைக்கு வந்தப்ப எனக்குப் படிப்பு இல்ல. அனுபவம் இல்ல. குடும்ப சூழ்நிலை மோசமா இருந்துச்சி. அப்பா செத்துட்டாரு. அம்மாக்கு உடம்பு சரியில்லை. தம்பி படிச்சிக்கிட்டு இருந்தான். ரெண்டு தங்கச்சிகளுக்குக் கல்யாணம் ஆகல. 'குமாஸ்தா வேலை இல்லாட்டி பியூன் வேலையாவது கொடுங்க' ன்னு தலைவர் கால்ல விழுந்தேன். எனக்கு குமாஸ்தா வேலையக் கொடுத்தாரு. அன்னிக்கு அந்த வேலை கெடைக்கலேன்னா எங்க குடும்பமே நடுத்தெருவுக்கு வந்திருக்கும். எனக்குத் தகுதி இல்லாட்டியும் வேலை கொடுங்கன்னு அன்னிக்கு தலைவர்கிட்ட கேட்ட நான் இப்போ தகுதி இருந்தும் ஏன் பிரமோஷன் கொடுக்கலன்னு கேட்டா அசிங்கமாயிடாது” “அது வேற...''“ஏழு வருஷத்துக்கு முன்னால மேனேஜர் போஸ்ட் காலியாச்சு. என்னைவிட அனுபவசாலியான ராமமூர்த்திக்குத்தான் அந்தப் பதவியக் கொடுத்திருக்கணும். தலைவர் எல்லா விதிமுறைகளையும் மீறி எனக்குக் கொடுத்தாரு. அப்ப நான் பெருமையா 'எங்க தலைவர் சீனியாரிட்டியவிட திறமையத்தான் அதிகம் மதிக்கறாரு'ன்னு சொன்னேன். இப்ப என் சீனியாரிட்டிய மதிக்காம சிவாவுக்கு புரமோஷன் ஏன் கொடுத்தீங்கன்னு கேட்டா தலைவர் என்னைப் பத்தி என்ன நினைப்பாரு”“ராமமூர்த்திக்கு சில பிரச்னைகள்”“எனக்கும் தெரியாம என்கிட்ட சில பிரச்னைகள் இருக்கலாம்”“இருந்தாலும்...''“மூணு வருஷத்துக்கு முன்னால என் பொண்டாட்டிக்கு ஹார்ட் அட்டாக் வந்தபோது தலைவர்தான் ஆஸ்பத்திரிக்கு ஏற்பாடு செஞ்சாரு. பத்து லட்ச ரூபாய்க்கு மேல செலவு. ஆபீஸ் விதிகள் படி ஒன்றரை லட்சம்தான் தர முடியும். ஆனா மொத்தச் செலவையும் கொடுத்தாரு. இன்னிக்கு என் பொண்டாட்டியோட இதயம் துடிச்சிக்கிட்டு இருக்கறதுக்கு தலைவர்தான் காரணம்”“அதுக்கு...”“நமக்கு ஆதாயம் கெடைச்சா தலைவர் விதிமுறைகளை மீறினாலும் தப்பில்லன்னு நெனைக்கறது, நமக்கு நஷ்டம் வந்தா விதிமுறைகள ஏன் மீறினீங்கன்னு சட்டம் பேசறது. என்னய்யா நியாயம் இது”“என்னதான் சொல்ல வரீங்க”“இந்தப் பதவி உயர்வு கொடுக்காதது மட்டுமில்லை. நாளைக்கே தலைவர் என்னை ஒரு பியூனாக்கிட்டாலும் நான் சந்தோஷமா அவருக்குக் காபி வாங்கிட்டு வருவேன். அவர் ஷூவையும் துடைச்சி வைப்பேன். அவருக்குத் தெரியும் எனக்கு எப்போ எதக் கொடுக்கணும்னு. நான் அந்தப் பியூன் வேலைக்குக்கூட லாயக்கில்லன்னு துரத்திட்டார்னா அவர் கால்ல விழுந்து கும்பிட்டு இதுவரைக்கும் வேலை கொடுத்து ஆதரிச்சதுக்கு நன்றின்னு சொல்லிட்டு கையை வீசிக்கிட்டு வெளியே போயிருவேன்”ராஜேந்திரன் வீட்டிற்குப் போனதும் லதா அவரை உலுக்கி எடுத்துவிட்டாள். “உங்க தலைவருக்கு புத்தி பிசகிடுச்சா”வாசுதேவனுக்குக் கொடுத்த அதே விளக்கங்களை அவளிடமும் சொன்னார்.“தலைவர விடுங்க. உங்க பச்சைப் புடவைக்காரிக்கு எங்க போச்சு அறிவு”“இங்க பாருடி தலைவர என்ன வேணும்னாலும் பேசு. எங்கம்மாவ - உன் மாமியாரக்கூடக் குறை சொல்லு. பொறுப்பேன். ஆனா பச்சைப்புடவைக்காரியப் பத்தி தப்பாப் பேசின, தெரியும் சேதி”“அன்னிக்கு மெனக்கெட்டு கோயிலுக்குப் போனது வீணாப் போயிடுச்சில்ல. மீனாட்சிக்குப் பட்டுப்புடவை சாத்தறேன்னு வேண்டிக்கிட்டேனே''“உங்கிட்டருந்து ஆறு முழம் புடவையை வாங்கிட்டு உன் புருஷனை ஜெனரல் மேனேஜராக்கணுமாக்கும். நல்லா இருக்குடி உங்க ஊர் நியாயம்”“எனக்கு மனசு கொஞ்சங்கூட ஆறலைங்க''“எங்க தலைவர் என்னப் போல் ஒரு சாதாரண மனுஷன். அந்த ஆளே அன்னிக்கு நான் என் குடும்பக் கஷ்டத்தச் சொல்லி அழுதபோது எனக்கு வேலை கொடுத்தாரு. ஏழு வருஷத்துக்கு முன்னால மேனேஜராக்கினாரு. எங்காத்தா அந்தப் பச்சைப்புடவைக்காரி தெய்வம்டி. அன்புல பெத்த அம்மாவுக்கும் மேலடி. இந்தப் பதவியக் கொடுக்கலையேன்னு கோபப்படறியே, நம்மகிட்ட இருக்கறதெல்லாம் எப்படி வந்துச்சு”“என்ன பேசறீங்க”“நாம குடியிருக்கற இந்த வீடு, டிரஸ், சாப்பிடற சாப்பாடு, ஏன் நாம உள்ள இழுத்து வெளிய விடற மூச்சு எல்லாமே அவ கொடுத்ததுதான். நாளைக்கு நம்மகிட்ட இருக்கறத எல்லாம் அவ பிடுங்கிக்கிட்டான்னா அவளக் கொடுமைக்காரின்னு திட்டுவியா. அவதாண்டி எல்லாத்துக்கும் சொந்தக்காரி. கொடுக்கறதும் அவதான். எடுக்கறதும் அவதான்.“அவ நமக்குக் கடன்பட்டவ இல்லடி. நாமதான் அவளுக்குக் கடன்பட்டவங்க. அப்படியிருந்தும் அவள் நமக்குக் கொட்டிக் கொட்டிக் கொடுக்கிறான்னா அதுக்கு அவ மனசுல இருக்கற அன்புதான் காரணம். நாம இழுத்து விடற ஒவ்வொரு மூச்சுக்கும் நன்றிக்கடனா ஆயிரம் தரம் அவ பேரைச் சொன்னாலும் போதாது” “என்னங்க இப்படி பேசறீங்க”“உன்னப் பத்தி எனக்குத் தெரியாதுடி ஆனா இந்த நிமிஷத்துல எனக்குக் கொடுத்ததெல்லாம் எடுத்துக்கிட்டு என்னை ஒரு கேடுகெட்ட பிச்சைக்காரனா நடுத்தெருவுல நிக்க வச்சாலும் அவதாண்டி என் தெய்வம். இனிமே ஆயிரம் வருஷம் நரகத்துல வேகணும்டான்னு என்னைத் தள்ளிவிட்டாலும் அவதாண்டி என் குல தெய்வம். நான் என்னிக்கும் அவ அடிமைதாண்டி. போய் உன் வேலையப் பாரு. நான் கோயிலுக்குப் போய்ட்டு வந்துடறேன்.”“இன்னிக்கு எதுக்குக் கோயிலுக்குப் போகணும்?”“எந்த சமயத்திலயும் அவளை நெனச்சி உருகற மனசக் கொடுத்தாளே புண்ணியவதி பச்சைப்புடவைக்காரி அவளுக்கு வாய் வார்த்தையாவது நன்றி சொல்ல வேண்டாமா”காட்சி முடிந்ததும் கண்ணில் கண்ணீர் தளும்ப பச்சைப்புடவைக்காரியின் காலில் விழுந்து கதறினேன்.“அன்பின் பாடங்களை நான் கைமண்ணளவுகூட கற்கவில்லை என்று என் தலையில் அழுத்தமாகக் குட்டிவிட்டீர்கள். மனதில் படமெடுத்து ஆடிய அகந்தைப் பாம்பைக் கொன்றுவிட்டீர்கள்..”“அந்த ராஜேந்திரனின் மனம் வேண்டும் என்று என்னிடம் வரம் கேட்கப் போகிறாய். சரிதானே”“தவறு, தாயே! ராஜேந்திரனின் வீட்டில் குப்பை கூட்ட வேண்டும். அவர் காலை அமுக்கிவிடும் இறைப்பணி வேண்டும். இந்த வரங்களைத் தருவீர்களா”அன்னை சிரித்தபடி காற்றில் கலந்தாள்.- தொடரும்வரலொட்டி ரெங்கசாமிvaralotti@gmail.com