உள்ளூர் செய்திகள்

பாவம் தீர்க்கும் அம்மன்

திருவனந்தபுரம் பழஞ்சிறைதேவி கோயிலில் பாடும் 'தோற்றப்பாட்டு' கேட்டால் பாவம் தீரும்; விருப்பம் நிறைவேறும். இந்த பகுதி ஒரு காலத்தில் காடாக இருந்தது. இதை 'அனந்தன் காடு' என்பர். இங்குள்ள நீலாற்றங்கரையில் தேவியின் தரிசனம் வேண்டி தவமிருந்தார் யோகீஸ்வரர் என்னும் முனிவர். அவருக்கு காட்சியளித்த தேவி, ''இங்கு என்னை பிரதிஷ்டை செய்து வழிபடு'' என்று சொல்லி மறைந்தாள். காட்சியளித்த கோலத்திலேயே அவளை சிலை வடித்து வடக்கு திசை நோக்கி பிரதிஷ்டை செய்தார் முனிவர். பின்பு இக்காடு அழிக்கப்பட்டு சிறைச்சாலை கட்டப்பட்டதால் 'பழஞ்சிறை' எனப் பெயர் வந்தது. அம்பிகைக்கு 'பழஞ்சிறை தேவி' என்று பெயர். நினைத்தது நிறைவேற தேவிக்கு புடவை, செவ்வரளிப்பூக்களால் அர்ச்சனை செய்கின்றனர். கொடுங்கல்லுார் தேவியின் அம்சமாக இவள் கருதப்படுகிறாள். கோயில் கட்டிய முனிவர் யோகீஸ்வரரின் சிலை அம்மனின் முன்பு உள்ளது. குழந்தைகளுக்கு ஏற்படும் தோஷம் இவளை வழிபட அகலும். இங்கு மாசிமாதம் திருவிழா தொடங்கும். 41 நாட்கள் விரதமிருந்த பக்தர்கள் அப்போது 'தோற்றப்பாட்டு' என்னும் பாடல்களை இசையுடன் பாடுவர்.இதைக் கேட்டால் கிரக தோஷம், முன்வினைப்பாவம், தடைகள் தீரும். எண்ணம் நிறைவேறும். நவக்கிரகம், சாமுண்டி, பிரம்ம ராட்சஸ், மாடன், தம்புரானுக்கு சன்னதி உள்ளன. யானை, சிங்க சிலைகள் கருவறையை சுமக்கின்றன. கருவறையின் மீது மும்மூர்த்திகள், மூன்று தேவியர், கங்கையுடன் கூடிய சிவன் சிலைகள் உள்ளன. பிரகாரத்தில் தசாவதார சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.கோயிலின் வெளியிலுள்ள ' சர்ப்பக்காவு' என்னும் வனப்பகுதியில் ஆறடி உயர நாகராஜர் சன்னதி உள்ளது. அபிஷேகம் செய்து இவரை வழிபட்டால் கண், தோல் சம்பந்தமான நோய் நீங்கும். ஜாதக ரீதியாக ராகு, கேது தோஷம் உள்ளவர்களும் பங்கேற்கின்றனர். எப்படி செல்வது: கிழக்குக்கோட்டை பஸ் ஸ்டாண்டில் இருந்து கோவளம் சாலையில் 5 கி.மீ., விசேஷ நாள்: புரட்டாசி நவராத்திரி மாசித்திருவிழாநேரம்: அதிகாலை 5:30 - 10:30 மணி; மாலை 5:00 - 8:30 மணிதொடர்புக்கு: 94474 00300, 0471 - 246 1037, 245 5204அருகிலுள்ள தலம்: திருவனந்தபுரம் அனந்தபத்மநாப சுவாமி கோயில் 5 கி.மீ., (வளமான வாழ்வு அமைய)நேரம்: அதிகாலை 4:15 - 12:00 மணி; மாலை 5:00 - 8:00 மணிதொடர்புக்கு: -0471 -245 0233