விருப்பம் நிறைவேற... நல்ல திருப்பம் உருவாக...
சக்தி தலங்களில் மதுரை மீனாட்சி, காஞ்சி காமாட்சி, காசி விசாலாட்சி விசேஷமானவை. இவற்றை ஒரே நேரத்தில் தரிசிக்கும் விதத்தில் பெங்களூரு சிவாஜி நகரில் அருகருகே கோயில்கள் உள்ளன. இங்கு வந்தால் விருப்பம் நிறைவேறும். நல்ல திருப்பம் உருவாகும். வெளியூர் செல்லும் வியாபாரிகள் தங்குவதற்கு சத்திரம் கட்டி அன்னதானம் வழங்கி வந்தார் கோவிந்த செட்டியார் என்னும் செல்வந்தர். இங்கு 1872ல் விஸ்வநாதர் கோயிலைக் கட்டினார். மைசூரு மகாராஜாவால் ராய்பகதுார் பட்டம் பெற்றவர் இவர். காசியில் இருந்து மாட்டு வண்டியில் எடுத்து வரப்பட்ட சிவலிங்கம், இக்கோயிலில் கிழக்கு நோக்கி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. முகப்பில் சால கோபுரத்துடன் உள்ள கோயிலின் நுழைவு வாசலில் இருக்கும் சண்டேஸ்வர அனுக்ரஹ மூர்த்தியின் சுதை சிற்பம் காண்போரை கவர்கிறது. விசாலாட்சியம்மன் தெற்கு நோக்கி அருள்புரிகிறாள். பிரகாரத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, அர்த்த நாரீஸ்வரர், சுப்பிரமணியர், சரஸ்வதி, சண்டிகேஸ்வரர், துர்கை, பைரவர் சன்னதிகள் உள்ளன. நடராஜர், சிவகாம சுந்தரி, மாணிக்க வாசகர், பிரதோஷ நாயகர், கணபதிக்கு பஞ்சலோக சிலைகள் உள்ளன.காரண ஆகம முறைப்படி தினமும் நான்கு கால பூஜை நடக்கிறது. தலவிருட்சமான வில்வமரம் கோயிலின் முன்புறத்தில் ஒன்றும், பிரகாரத்தில் ஒன்றுமாக இரண்டு உள்ளன. குழந்தைப்பேறு கிடைக்க ஆடிப்பூரத்தன்று முளை கட்டிய பயறு, வாழைப்பழம், வளையல், மஞ்சள், குங்குமத்தை அம்மனின் மடியில் கட்டி பூஜை நடத்துவர். இதை தம்பதியர் சாப்பிட்டால் அறிவும், அழகும் கொண்ட குழந்தைகள் பிறப்பர்.தலைஆடி என்னும் ஆடி மாதப்பிறப்பன்று அம்மனுக்கு 1008 தாமரைகளால் மூலமந்திர சகஸ்ர நாம அர்ச்சனை நடக்கும். திருக்கார்த்திகையன்று தென்னை, பனை, செண்பக மரக்கட்டைகளை அடுக்கி சொக்கப்பனை கொளுத்துவர். கார்த்திகை மாத திங்களன்று 108 சங்காபிேஷகம் நடக்கும்.2024 ஆனி மாதம் 152வது வருஷாபிேஷகம் நடக்க உள்ளது. வருஷாபிேஷகத்தின் போது, சுவாமிக்கும், அம்மனுக்கும் கனகாபிேஷகம்(தங்க நாணயங்களால் அபிேஷகம்) நடக்கும். தினமும் இரவு 8:00 மணிக்கு நடக்கும் பள்ளியறை பூஜையைத் தரிசித்து பால் பிரசாதம் சாப்பிட்டால் குடும்ப ஒற்றுமை சிறக்கும். ஒரே நாளில் மூன்று அம்மன்களை தரிசிக்கும் விதத்தில் அருகிலேயே மீனாட்சி, காமாட்சியம்மன் கோயில்கள் உள்ளன. திங்கள், பவுர்ணமியன்று தரிசித்தால் மன வலிமை அதிகரிக்கும். திருமணத்தடை நீங்கும். தாயாரிடமுள்ள கருத்துவேறுபாடு மறையும். எப்படி செல்வது : ஓசூரில் இருந்து 42 கி.மீ.,பெங்களூரு கன்டோன்மென்ட் ரயில் நிலையம் அருகிலுள்ள திம்மையா சாலையில் கோயில் உள்ளது. விசேஷ நாள்: சித்ராபவுர்ணமி, ஆனி அவிட்டம் சொர்ணாபிேஷகம் நடராஜர் ஆறுகால அபிேஷகம் ஆடிப்பூரம், பங்குனி உத்திரம் திருக்கல்யாணம் நேரம்: காலை 6:30- - 12:00 மணி; மாலை 5:00 - - 8:00 மணிதொடர்புக்கு: 96325 06092அருகிலுள்ள தலம்: ஏகாம்பரேஸ்வரர் தர்மராஜா கோயில், மீனாட்சி அம்மன் கோயில் 1 கி.மீ.,(நினைத்தது நிறைவேற...)நேரம்: காலை 6:30 - 12:00 மணி; மாலை 5:00 - 8:30 மணிதொடர்புக்கு: 080 - 2559 5866