அஷ்ட விநாயகர் தலைமையகம்!
மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள அஷ்ட கணபதி கோயில்களில் தலைமையானதாகக் கருதப்படுவது மோர்காவ் விநாயகர் கோயில். இத்தலத்தில் முருகனுக்குரிய மயில் வாகனம் மீது, விநாயகர் அமர்ந் துள்ளது விசேஷமான அம்சம்.தல வரலாறு: கண்டகி நகரை ஆட்சி செய்தவர் ரபாணி. இவரது மனைவி உக்ரா. இவர்கள் குழந்தை வரம் வேண்டி சூரியபகவானை பிரார்த்தித்தனர். உக்ரா கர்ப்பமானாள். சூரியனின் அருளால் உருவான கரு என்பதால் அதன் வெம்மையை உக்ராவால் தாங்க இயலவில்லை. எனவே, கருவை கடலில் விட்டாள் உக்ரா. கடலுக்குள் அது ஆண் குழந்தையாக வடிவெடுத்தது. அதன் வயிற்றில் சாகாமருந்தான அமுதத்தை வைத்தார் சூரியன். அமுதம் அவன் வயிற்றில் இருக்கும்வரை, அவனை யாராலும் அழிக்க முடியாத வரமும் தந்தார்.கடலரசன் குழந்தையை ரபாணியிடம் ஒப்படைத்தான். அதற்கு 'சிந்து' என பெயரிட்டு வளர்த்தார். 'சிந்து' என்றால் 'கடல்'. தன் அபார சக்தியால் பூவுலகையும், தேவலோகம், விஷ்ணுலோகத்தை ஜெயித்தான். இறுதியாக கைலாசத்துக்குள்ளும் புகுந்தான். அவனிடம் போரிட்டால் வெற்றி பெற இயலாது என்ற நிலையில், சிவன் பார்வதியுடன் மேருமலைக்கு போய் விட்டார்.பின் சிந்துவுக்கு, கமலாசுரன் என்ற அசுர நண்பன் கிடைத்தான். இவனுக்கு ஒரு அபார சக்தி உண்டு. இவனை வெட்டினால் சிந்தும் ரத்தத்துளி ஒவ்வொன்றும் ஒரு அசுரனாக மாறும். சிவனைத் தேடிப்பிடிக்கும் படி கமலாசுரனுக்கு சிந்து உத்தரவிட்டான். இந்நிலையில் உலகைக் காக்க விநாயகரைப் படைத்தார் சிவன்.''இவரே இனி உலக நாயகன். இவரை முதன் முதலாக வணங்கியே எந்தச் செயலையும் துவங்க வேண்டும்,'' என தேவர்களுக்கு உத்தரவிட்டார். இந்த சமயத்தில், கமலாசுரன் மேருமலைக்கு வந்து விடவே குழந்தை விநாயகர் கமலாசுரனைப் பந்தாடினார். ஆனால், அவனது ரத்தத்துளிகளிலிருந்து அரக்கர்கள் பெருகவே, பிரம்மனின் புத்திரிகளான சித்தி, புத்தியை அழைத்து அந்த ரத்தத்துளிகள் தரையில் விழாமல் பருகச் செய்தார். கமலாசுரன் அழிந்தான்.கமலாசுரனைக் காணாத சிந்து, சிவனைத் தேடி வந்தான். இதற்குள் தேவசிற்பி விஸ்வகர்மா, விநாயகருக்கு பாசம், அங்குசம் முதலான ஆயுதங்களை செய்து வழங்கினார். இவற்றைப் பயன்படுத்தி, மயில் மீது வேகமாக வந்த விநாயகர், சிந்துவின் வயிற்றைக் கிழித்து, அதிலிருந்த அமிர்தத்தை கீழே கொட்டும்படி செய்தார். சிந்து இறந்தான். இந்தப் போரில் விநாயகரின் சகோதரர் முருகனும், முருகனின் சேனைத்தலைவர் வீரபாகுவும் விநாயகருக்கு உதவினர். இதன்பின் அந்த தலத்தில் 'மயூரேஸ்வரர்' என்ற பெயரில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் செய்தார்.'மோர்காவ்' என்றால் 'மயில்கள் நிறைந்த இடம்'. இந்த போருக்கு பிறகு தனக்கு போரில் உதவிய சகோதரன் முருகனுக்கு தன் மயிலை பரிசாகக் கொடுத்த விநாயகர், சிம்மத்தை தனது வாகனமாக்கிக் கொண்டார். மயில் மீதும், சிம்மத்தின் மீதும் அமர்ந்துள்ள விநாயகரை இந்தக் கோயில் கோபுரத்தில் காணலாம்.சிறப்பம்சம்: விநாயகர் கோயிலாக இருந்தாலும், வாசலில் நந்திதேவர் காவலாக இருக்கிறார். இந்த நந்தியைப் பெயர்த்து, சிவாலயம் ஒன்றுக்கு எடுத்துச் செல்லும் முயற்சி எடுத்தனர். அப்போது, பூஜாரியின் கனவில் தோன்றிய நந்தீஸ்வரர், ''நான் மயூரேஸ்வரராக விளங்கும் இந்த விநாயகரின் திருவடிகளை எந்நாளும் தரிசிக்க விரும்புகிறேன். உலகையே காக்கும் இந்தப் பரம்பொருளை பார்த்துக் கொண்டே இருப்பேன்,'' என சொல்லி விட்டார். நந்திக்கு அடுத்து, வாசலில் உள்ள ஒரு மூஞ்சுறு கையில் 'மோடக்' எனப்படும் இனிப்பு பண்டத்தை வைத்துள்ளது. இது மிகப்பெரிய வடிவில் உள்ளது. இந்த மூஞ்சுறுக்கு முன்னால் ஒரு ஆமை வடிவ பலகை இருக்கிறது. இதில் அமர்ந்து பூஜைகளை நாமே செய்யலாம். தன் உறுப்புகளை ஓட்டுக்குள் ஒடுக்கும் ஆமை போல, ஐம்புலன்களையும் அடக்கி கணபதியை வணங்க வேண்டும் என்ற அடிப்படையில் இவ்வாறு செய்கிறார்கள். கோயில் பிரகாரத்தில், நான்கு தலையுள்ள 'விநாயகி' என்ற அம்மனையும், சித்தி, புத்தி விநாயகரையும் காணலாம். நக்ன பைரவர்: இக்கோயிலின் மற்றொரு விசேஷம் பைரவர் சிலை. மகாராஷ்டிராவில் பைரவர் சிலை உள்ள கோயில் இது மட்டுமே. தமிழகத்திலுள்ள பைரவரை அவரது நாயைக் கொண்டு கண்டுபிடித்து விடலாம். இவருக்கு நாய் வாகனம் இல்லை. இவரை 'நக்ன பைரவர்' என்கின்றனர்.தினமும் மதியம் மகாபூஜை நடக்கும் தலம் இது. மற்ற ஊர்களில், விழாக்காலங்களில் மட்டுமே நடத்தப்படும் இப்பூஜை இத்தலத்தில் தினமும் நடக்கிறது. இந்த தலத்தை 'சுவானந்த தலம்' என்பர். அதாவது, இங்கு வந்தாலே, சொர்க்கம் உறுதியாகி விட்டது என்று பொருள். கருவறையில் உள்ள விநாயகர் சித்தி, புத்தியுடன் செந்தூர நிறத்தில் உள்ளார். தங்குவதற்கு அறைகள் உள்ளன. தினமும் அன்னதானம் உண்டு. திறக்கும் நேரம்: காலை 5-இரவு 10.இருப்பிடம்: புனேயிலிருந்து சோலாப்பூர் செல்லும் ரோட்டில் 56 கி.மீ., சென்றால், சாபுலா கிராமம். இங்கிருந்து திரும்பும் ரோட்டில் 23 கி.மீ., பயணித்தால் மோர்கா.போன்: 02112 279 236.