உள்ளூர் செய்திகள்

மனித வடிவில் விநாயகர்

விநாயகரை யானை முகத்தோடு தரிசித்திருப்பீர்கள். யானை முகத்தை அவர் அடையும் முன்பாக இருந்த கோலத்தை தரிசிக்க ஆவலா...திருவாரூர் மாவட்டம் செதலபதி முக்தீஸ்வரர் கோயிலுக்கு வாருங்கள். கைலாயத்தில் ஒருநாள் பார்வதி மஞ்சள் பொடியில் சிறுவன் ஒருவனை உருவாக்கி 'விக்னேஷ்வரன்' எனப் பெயரிட்டாள். அவனிடம் தன் இருப்பிடத்திற்குள் யாரையும் அனுமதிக்க வேண்டாம் எனக் கட்டளையிட்டாள். விக்னேஷ்வரன் காவல் புரிந்த போது சிவபெருமான் அங்கு வந்தார். பார்வதியின் கணவர் என்று சொல்லியும் சிறுவன் அனுமதிக்கவில்லை. இதைக் கண்ட நந்தீஸ்வரர் சிறுவனுடன் சண்டையிட்டார். அவரையும், அவருடன் வந்த பூதகணங்களையும் சிறுவன் விரட்டி அடித்தான். கோபமடைந்த சிவன் அவனது தலையை வெட்டினார். விஷயமறிந்த பார்வதி தன் மகனை உயிர்ப்பிக்கும்படி சிவனை வேண்டினாள். 'வடக்கு நோக்கி யார் படுத்திருந்தாலும், அவரது தலையை மட்டும் கொண்டு வாருங்கள். சிறுவனுக்கு பொருத்தி உயிர் கொடுக்கலாம்' என பூதகணங்களுக்கு கட்டளையிட்டார் சிவபெருமான். யானை ஒன்று படுத்திருக்க அதன் தலையைக் கொண்டு வந்தனர். அதையே பொருத்தி உயிர் கொடுத்தார் சிவபெருமான். அத்துடன் பூதகணங்களுக்கு சிறுவனைத் தலைவனாக்கி, 'கணபதி' என்றும் பெயரிட்டார். எந்த பூஜை செய்தாலும் கணபதியை வழிபட்டுத் தொடங்கினால் தான் வெற்றி கிடைக்கும் என வரமளித்தார். இதனால் 'விநாயகர்' என்றும் பெயர் வந்தது. 'வி' என்றால் மேலான. 'நாயகர்' என்றால் தலைவர் என்பது பொருள். யானை முகம் ஏற்படுவதற்கு முன்பிருந்த கோலத்தில் விநாயகரை வழிபடுவதற்காக இத்தலத்தில் கோயில் எழுப்பப்பட்டது. மேற்கு நோக்கியபடி 'ஆதி விநாயகர்' என்னும் பெயரில் சுவாமி இங்கிருக்கிறார். சீதையைக் கடத்திய ராவணனுடன் போரிட்டு உயிர் விட்ட ஜடாயுக்கு இத்தலத்தில் ராமர் சிராத்தம் செய்தார். அவர் பிடித்து வைத்த நான்கு பிண்டங்கள் சிவலிங்கங்களாக மாறின. சிவபூஜை செய்யும் கோலத்தில் ராமர் இங்கிருக்கிறார். மூலவராக சிவபெருமான் முக்தீஸ்வரர் என்னும் பெயரில் வீற்றிருக்கிறார். சூரியனும், சந்திரனும் சந்திக்கும் நாள் அமாவாசை. இருவரும் இங்கு இணைந்தே இருப்பதால் இத்தலம் 'நித்ய அமாவாசை கோயில்' எனப்படுகிறது. இங்கு பிதுர் தர்ப்பணம் செய்ய அமாவாசை, திதி, நட்சத்திரம் பார்க்கத் தேவையில்லை. எந்த நாளிலும் தர்ப்பணம் செய்யலாம்.எப்படி செல்வது: திருவாரூர் - மயிலாடுதுறை சாலையில் 20 கி.மீ., துாரத்தில் பூந்தோட்டம் உள்ளது. அங்கிருந்து பிரியும் சாலையில் 4 கி.மீ., விசேஷ நாள்: சங்கடஹர சதுர்த்தி, அமாவாசை, விநாயகர் சதுர்த்தி, திருக்கார்த்திகை, மகாசிவராத்திரி நேரம்: காலை 6:00 - 12:00 மணி: மாலை 4:00 - 8:00 மணிதொடர்புக்கு: 94427 14055, 04366 - 238 818, 239 700அருகிலுள்ள தலம்: மயிலாடுதுறை மாயூரநாத சுவாமி கோயில்நேரம்: அதிகாலை 5:30 - 12:00 மணி; மாலை 4:00 - 8:30 மணிதொடர்புக்கு: 04364 - 222 345, 223 779