உள்ளூர் செய்திகள்

பிறந்த வீட்டு சீதனம்

காளி என்றாலே நினைவுக்கு வருவது கோல்கட்டா தான். மேற்கு வங்க மாநிலத்தில், கங்கையின் கிளை நதியான ஹூக்ளியின் கரையில் கோல்கட்டா காளி கோயில் உள்ளது. நவராத்திரியை இங்கு 'துர்காபூஜை' 'காளிபூஜை' என சிறப்பாக கொண்டாடுகின்றனர். இந்நாளில் வீடுகளில் துர்கையின் மண் சிலைகளை வைத்து வழிபடுவர். கோல்கட்டா மக்கள் துர்கையைத் தங்களின் மகளாகக் கருதுகின்றனர். நவராத்திரியின் போது, புகுந்த வீடான இமயமலையில் இருந்து, தாய் வீடான மேற்கு வங்கத்திற்கு அம்பிகை வருவதாக ஐதீகம். இந்த நாட்களில் காலை, மதியம், இரவு நேரத்தில் பழம், இனிப்பு வகை படைத்து துர்கையை வழிபடுவர். மதியம் பிரசாதத்தில் 'கிச்சடி' என்னும் பொங்கல் இடம் பெற்றிருக்கும். பூஜையின் கடைசி நாள் பிறந்த வீட்டு சீதனத்துடன், வெற்றிலை, பாக்கு கொடுத்து அம்மனை வழியனுப்புவர். அதன்பின், நீர்நிலைகளில் அம்மனின் சிலைகளைக் கரைத்து விடுவர்.