ஒற்றுமையுடன் பணிசெய்க!
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், ஒருசமயம் பிரச்சாரகர்களை தனித்தனியாக அழைத்து வழங்கிய நற்போதனையைக் கேளுங்கள்.நீங்கள் காந்தமாகப் பணி செய்ய வேண்டும். பலாத்காரம் செய்யக்கூடாது. மக்களுக்கு சிறந்த கருத்துக்களை எடுத்துக்கூற வேண்டும். அவர்களுக்கு வெறுப்பு உண்டாகுமாறு நடக்கக்கூடாது.நீங்கள் ஒற்றுமையாக இருந்து வேலை செய்ய வேண்டும். வேறு மதத்தவர்களையும் நீங்கள் சந்திக்கக்கூடும். அவர்களைக் காண்பீர்களானால், முதலாவதாக ஆண்டவன் ஒருவனே என்பதையும், நான் அவனுடைய தூதர் என்பதையும் அறிவுறுத்துங்கள். அவர்கள் அவற்றை ஒப்புக்கொண்டால், 'இரவிலும் பகலிலும் ஐந்து நேரத்தொழுகையை ஆண்டவன் உங்கள் மீது கடமையாக்கி இருக்கிறான்' என்று கூறுங்கள். அவர்கள் அதை அங்கீகரித்த பின் 'தர்மம் செய்ய வேண்டியது உங்கள் மீது கடமையாயிருக்கும். உங்களில் செல்வர்களிடமிருந்து நிதிவசூலித்து, ஏழைகளுக்குக் கொடுக்கப்படும்' என்று சொல்லுங்கள். எவரையும் கொடுமைப்படுத்தாதீர்கள்.ஏனெனில், கொடுமைப்படுத்தப்பட்டோரின் பிரார்த்தனைக்கும், ஆண்டவனுக்கும் திரை ஒன்றும் இல்லை.நாயகத்தின் இந்த நல்லுரைகளை, அனைவரும் கடைபிடித்து நலம் பெறுவோம்.