உள்ளூர் செய்திகள்

ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்ட வேண்டுமா?

“ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டுங்கள்” என்பது இயேசு சொன்னதாகச் சொல்லப்படும் பிரபல சொற்றொடர். இயேசு உண்மையில் அப்படி சொன்னாரா? எனில், ஏன் சொன்னார்? யாரிடம் அப்படி சொன்னார்? இந்த கேள்விகளுக்கு விடை காண, தொடர்ந்து வாசியுங்கள்.சத்குரு:பாருங்கள், இயேசு இதை அவரைச் சுற்றி இருந்த 12 பேருக்கு சொல்லியிருக்கலாம். அது ஒரு பொதுவான போதனை இல்லை. அவருடைய தூதுவர்களுக்கு, அவருடைய போதனையை எடுத்துச் செல்பவர்களுக்கு அவர் சொல்கிறார், 'யாராவது உங்களை ஒரு பக்கம் அறைந்தால், அவர்களுக்கு உங்கள் மறு கன்னத்தைக் காட்டுங்கள்.' அவர் அதை உலகம் முழுவதற்கும் சொல்லவில்லை.

ஒரு கன்னத்தில் அறைந்தால்

அந்த மனிதர், அவர் வாழ்ந்த விதத்தைப் பார்த்தால், அவர் இன்னொரு கன்னத்தைக் காட்டும் ரகம் கிடையாது. அவர் கோவிலுக்குள் வந்து, எல்லா வியாபாரங்களையும் வெளியே தூக்கி எறிந்தவர்.அவர் வந்து, 'சரி உங்களுக்கு இங்கே ஒரு கடை இருக்கிறது, இன்னொரு கடையை அங்கே வையுங்கள்' என்று சொல்லவில்லை. அவர் அப்படி சொன்னாரா? நேரடியாக அவர் கையாலேயே அவர்களின் வியாபாரத்தை அழித்தார், இல்லையா?அவர் எல்லோருக்கும் தன் மறுகன்னத்தைக் காட்டும் ரகம் இல்லை. அவர் தன்னுடைய தூதுவர்களிடம் இப்படி சொல்கிறார், 'நீங்கள் என்னுடைய போதனையை எடுத்துச் செல்ல விரும்பினால், நீங்கள் இப்படி இருக்க வேண்டும். உங்களிடம் எந்த எதிர்ப்பும் இருக்கக்கூடாது. மக்கள் என்ன செய்தாலும் சரி, நீங்கள் உங்கள் பாதையில் இருந்து தடம் பிறழக்கூடாது, நீங்கள் உங்கள் பாதையிலேயே இருக்க வேண்டும்.” அவ்வளவுதான் அவர் சொல்கிறார்.அந்த கலாச்சாரங்கள் கதை மூலமாக எல்லாவற்றையும் சொல்வதால், எல்லாவற்றையும் ஒரு எடுத்துக்காட்டோடு சொல்வார்கள். இல்லையென்றால், ஏதாவது ஒரு உவமையோடு சொல்வார்கள்.அவர் சொல்கிறார், 'யாராவது உங்கள் கன்னத்தில் அறைந்தால், மறு கன்னத்தைக் காட்டுங்கள். நோக்கத்தில் இருந்து மாறக்கூடாது.'

எதிர்செயல் வேண்டாம்

யாராவது உங்களை ஒரு கன்னத்தில் அறைந்தால், நீங்கள் அவரை, அவரது மறு கன்னத்தில் அறைய முயற்சி செய்தால், நீங்கள் அமைதி அன்புடைய உங்கள் பாதையில் இருந்து திசைமாறிப் போவீர்கள், இல்லையா?அதனால் அவர் சொல்கிறார், 'நீங்கள் உங்கள் பாதையில் இருந்து தடம் மாறாதீர்கள், உங்கள் பாதையில் அப்படியே இருங்கள், யார் என்ன சொன்னாலும் சரி.'அவர் என்ன சொல்கிறார் என்றால், 'நீங்கள் உங்கள் வாழ்க்கையில் ஒரு எதிர்வினையாக ஆகிவிடாதீர்கள். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செயல்பட விரும்பினால், நீங்கள் எதிர்செயல் செய்யக்கூடாது. நீங்கள் அப்படி செய்தால், நீங்கள் இன்னொருவருக்கு அடிமையாகிவிடுவீர்கள். நீங்கள் அவர்கள் எல்லோர் பின்னாலும் போவீர்கள்.'அவர் சொல்வதெல்லாம், 'எதிர்செயல் செய்யாதீர்கள்.' அதை அவருடைய பாணியில் சொல்கிறார். அதனால் அதை அப்படியே எடுத்துக்கொள்ளக் கூடாது. அவர் வாழ்க்கையே இதற்கு எடுத்துக்காட்டு. அவர் அதை அப்படியே எடுத்துக்கொள்ளவில்லை, இல்லையா?