யாதவுக்கு தேர்தல் கமிஷன் பதிலடி!
'அரசியலுக்காக இப்படியா செய்வது...' என, பீஹார் முன்னாள் துணை முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான தேஜஸ்வி யாதவ் மீது கோபப்படுகின்றனர், இங்குள்ள, பா.ஜ., மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர். பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. முன்னாள் முதல்வரான லாலு பிரசாத் யாதவின், ராஷ்ட்ரீய ஜனதா தளம் பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. பீஹாரில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், வாக்காளர் பட்டியலில் தேர்தல் கமிஷன் திருத்தம் செய்து புதிய பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், இடம் பெயர்ந்தவர்கள், இறந்தவர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. 64 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை எதிர்த்து, எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் தான், திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலில் தன் பெயரும் இடம்பெறவில்லை என, தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டியுள்ளார். 'வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத நிலையில், நான் எப்படி தேர்தலில் போட்டியிட முடியும்...' என, அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தேர்தல் ஆணையமோ, 'தேஜஸ்வி யாதவ் பொய்யான குற்றச்சாட்டை கூறுகிறார்...' எனக்கூறி, வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இடம் பெற்றுள்ளதற்கான ஆதாரத்தை, சமூக வலைதளத்தில் வெளியிட்டு, பதிலடி கொடுத்துள்ளது. 'தேஜஸ்வி யாதவ், முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்க்கிறாரே...' என கிண்டலடிக்கின்றனர், பீஹார் மக்கள்.