அப்படி என்ன பாசமோ?
'பா.ஜ., மேலிடம் இவரை கண்டுகொள்ளவில்லை என்றாலும், இவர், அவர்களை விட மாட்டார் போலிருக்கிறதே...' என, ஆந்திர முன்னாள் முதல்வரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி பற்றி ஆச்சரியத்துடன் பேசுகின்றனர், டில்லியில் உள்ள அரசியல்வாதிகள். ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடக்கிறது. கடந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தலின் போது, பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணியில் இணைவதற்கு, சந்திரபாபு நாயுடு, ஜெகன்மோகன் ரெட்டி என இருவருமே போட்டி போட்டனர். இறுதியில், ஜெகன்மோகன் ரெட்டியை கழற்றி விட்ட பா.ஜ., மேலிடம், சந்திரபாபு நாயுடுவுக்கு பச்சைக்கொடி காட்டியது. அடுத்த மாதம், 9ம் தேதி நடக்கவுள்ள துணை ஜனாதிபதி தேர்தலில் தே.ஜ., கூட்டணி சார்பில், தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சியான, 'இண்டியா' கூட்டணி சார்பில், ஆந்திராவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார். தே.ஜ., கூட்டணியில் இருப்பதால், சந்திரபாபு நாயுடு, சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், ஜெகன்மோகன் ரெட்டியும், தானாக முன்வந்து ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். 'பா.ஜ., மீது ஜெகன்மோகன் ரெட்டிக்கு அப்படி என்ன பாசமோ தெரியவில்லை...' என, டில்லியில் உள்ள அரசியல் தலைவர்கள் கிண்டல் அடிக்கின்றனர்.