தினமலர் செய்தி எதிரொலி பழுதான மின்மாற்றி சீரமைப்பு
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், மருத்துவம்பாடி, ஆனைப்பள்ளம் ஆகிய பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்குள்ள விளைநிலங்களுக்கு மின்சாரம் வழங்க, இரண்டுக்கும் மேற்பட்ட இடங்களில் மின்மாற்றி அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதில் மருத்துவன்பாடி பெட்டி பிள்ளையார் குளம் அருகே உள்ள, மின்மாற்றி வாயிலாக 200 ஏக்கர் பரப்பளவிலான விளைநிலங்களுக்கு நீர்பாசனம் செய்யப்பட்டு வந்தது. தற்போது, மின்மாற்றி பழுதடைந்து, மின்சாரம் விநியோகம் செய்வது தடைப்பட்டு இருந்தது. இதனால், விளைநிலங்களுக்கு மின்மோட்டார் வாயிலாக நீர்பாய்ச்ச முடியாமல், விவசாயிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வந்தனர். இது குறித்து, நம் நாளிதழிலில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நேற்று பழுதடைந்த மின்மாற்றி சீரமைக்கபட்டது.