தினமலர் செய்தி எதிரொலி: குடிநீர் பிரச்னைக்கு தீர்வு
புவனகிரி: தினமலர் செய்தி எதிரொலியாக குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது. கீழ் புவனகிரி, சின்னப்ப முதலித்தெரு, சவுராஷ்டிரா தெரு, புது தெரு, வங்காளதன் சந்து, குருசாமி தோப்பு உள்ளிட்ட சுற்று பகுதியில், 500 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு புவனகிரி பஸ் நிலையம் அருகில் மேல்நிலைத்தேக்க தொட்டி அமைத்து, போர்வெல் மூலம் தண்ணீர் தேக்கி, குழாய் மூலம் வீதிகளுக்கு வழங்கப்படுகிறது. இப்பகுதியில் கடந்த சில தினங்களாக குடிநீர் சுகாதாரமற்ற முறையில் வினியோகிக்கப்பட்டது. இது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தியானது. இந்நிலையில் செயல் அலுவலர் அண்ணாதுரை, கண்காணிப்பாளர் கண்ணன் உள்ளிட்டோர், சம்பவ இடத்தில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்தனர். தொடர்ந்து, சுகாதாரமான முறையில் குடிநீர் குழாய் மூலம் வினியோகிக்கப்பட்டு வருகிறது.