பத்திரிகை செய்தி: துணை பொதுச்செயலர் பதவியை, உதயநிதி முழுமனதாக ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் விரும்பியிருந்தால், பொன்முடியிடம் இருந்த துணை பொதுச்செயலர் பதவி, உதயநிதிக்கு கிடைத்திருக்கும். ஆனால், பொன்முடி நீக்கப்பட்டதும், அவர் வகித்த பதவி, திருச்சி சிவாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.டவுட் தனபாலு: து.பொ.செ., பதவியை உதயநிதி விரும்பவில்லையா... அப்படீன்னா, அடிக்கடி உடல்நிலை சரியில்லை என்று, 'டிமிக்கி' கொடுத்து, இழுத்து போர்த்தி படுக்கிறாரே... அதுக்கு என்ன காரணமா இருக்கும்ங்கற, 'டவுட்' எழுதே!ஈரோடு கிழக்கு தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரகுமார்: நான் முன்பிருந்த கட்சியில் தன்னிச்சையாக பேசும், பேட்டி கொடுக்கும் இடத்தில் இருந்தேன். தி.மு.க., அப்படி அல்ல. இங்கு பல அமைப்புகள் உள்ளன. எனவே, நானாக பேட்டி கொடுப்பது, நிகழ்ச்சி நடத்துவது சரியல்ல. அப்படி நடத்தினாலும் அமைச்சர் முத்துசாமி ஒன்றும் நினைக்க மாட்டார். மற்றவர்கள் எதையாவது பேசி, திரித்து விடுவர். எனவே, அமைச்சருடன் சேர்ந்து பணி செய்து வருகிறேன். டவுட் தனபாலு: தே.மு.தி.க.,வுல நீங்க இருந்தப்ப, கட்சித் தலைவர் விஜயகாந்த் உங்களை செல்லமா வச்சிருந்தாரு... அதுக்கப்புறமா உங்களுக்கு மரியாதை இல்லைங்கிற மாதிரி, 'சீன்' போட்டுட்டு, அங்கிருந்து கிளம்பி, தி.மு.க.,வுல ஐக்கியமாகிட்டீங்க... இங்கே, 'அளவுக்கு அதிகமா மரியாதை' கிடைப்பதால் தான், அமைச்சர் முத்துசாமிக்கு சாமரம் வீச ஆரம்பிச்சிட்டீங்களோன்னு, 'டவுட்' வந்துடுச்சே!பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்: பா.ம.க., பிரச்னையில் பா.ஜ., சமரசத்தில் ஈடுபடவில்லை. ஆடிட்டர் குருமூர்த்தி நாட்டில் நல்ல விஷயம் நடக்க வேண்டும் என்பவர். அவர் மக்கள் நலன் விரும்பி என்பதால் சந்தித்திருக்கலாம். டவுட் தனபாலு: குருமூர்த்திக்கு ஏகப்பட்ட விவகாரங்கள்ல ஈடுபட ஆசை இருக்கலாம். மக்கள் நலன் குறித்து, பா.ம.க., நிறுவனர், டாக்டர் ராமதாசுடன் அளவளாவி இருந்திருக்கலாம். ஆனா, உங்களுக்கெல்லாம் அந்த மாதிரி அக்கறை இல்லாம போச்சோங்கிற, 'டவுட்'டை தீர்த்து வையுங்களேன்!