உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., இன்பதுரை: 'துரைமுரு கனை விட்டுவிட்டு, உதயநிதிக்கு ஏன் துணை முதல்வர் பதவி தந்தனர்?' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கேள்வி எழுப்பினார். உடனே, 'துணை முதல்வர் பதவி குறித்து கேள்வி எழுப்ப பழனிசாமி யார்?' என, துரை முருகன் கேட்டிருக்கிறார். 'அரண்மனையில் உத்தியோகம்; சத்திரத்தில் சாப்பாடு' என்ற சொலவடை உண்டு. அப்படியொரு நிலைமையில் இருக்கும் துரைமுருகனுக்காக கேள்வி எழுப்புவதில் எவ்வித பிரயோஜனமும் இல்லை. டவுட் தனபாலு: அது சரி... துரைமுருகன் மட்டும் மவுனமா இருந்துட்டா, நீங்க சொல்றதை அவர் ஏத்துக்கிட்ட மாதிரி ஆகிடுமே... அது, இருக்கிற பதவி களுக்கும் ஆபத்தை ஏற்படுத்திடும் என்பதால் தான், ஊருக்கு முந்திக்கிட்டு உங்களுக்கு கண்டனம் தெரிவிச்சிருக்கார் என்பதில், 'டவுட்'டே இல்லை!  தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை: நீலகிரி மாவட்டம், கூடலுாரை அடுத்த பந்தலுாரில் பெய்த மழையில், தேவாலா அரசு மேல்நிலைப் பள்ளியின் கூரை பறந்து, அருகில் உள்ள வீட்டில் விழுந்து, அந்த வீட்டின் கூரையையும் சேதப் படுத்தி இருக்கிறது. 10,000 புதிய பள்ளி கட்டடங்கள் கட்டப்படும் என்று வாக்குறுதி கொடுத்து, ஆட்சிக்கு வந்த தி.மு.க., இதுவரை கட்டியதை விட, இடிந்து விழுந்த பள்ளி கட்டடங்களே அதிகம். டவுட் தனபாலு: அது சரி... இடிஞ்சு விழுந்தால் தானே புதுசா கட்ட முடியும்... மொத்தமா, 10,000 பள்ளிகள் இடிஞ்சு விழட்டும்... அப்புறமா புதுசா கட்டிக்கலாம்னு காத்துட்டு இருக் காங்களா என்ற, 'டவுட்'தான் வருது!  தமிழக துணை முதல்வர் உதயநிதி: 'ஓரணியில் தமிழகம்' என்ற முன்னெடுப்பை முதல்வர் துவக்கி உள்ளார். இதில், 2 கோடி பேரை தி.மு.க.,வில் இணைத்து உள்ளோம். இதை பார்த்து, அ.தி.மு.க.,வுக்கும், பா.ஜ.,வுக்கும் பயம் வந்து விட்டது. அதனால் தான், பழனிசாமி எங்கு சென்றாலும், ஓரணியில் தமிழ கம் குறித்து புலம்பிக் கொண்டி ருக்கிறார்; 'தமிழகத்தை மீட்போம்' என சொல்லிக் கொண்டிருக் கிறார். அவர், முதலில், பா.ஜ.,விடம் இருந்து, அ.தி.மு.க.,வை மீட்டெடுக்கும் வேலையை பார்க்க வேண்டும். டவுட் தனபாலு: அ.தி.மு.க., வை ஏதோ பா.ஜ.,விடம் அடகு வைத்த மாதிரி சொல்றீங்களே... அப்படி பார்த்தால், அறிவாலயத்தில் அடகு வைக்கப்பட்டிருக்கும் காங்., - வி.சி., - ம.தி.மு.க., மற்றும் கம்யூ., கட்சிகளை மீட்டு எடுக்க பழனிசாமி குரல் கொடுத்தால், உங்களால பதில் தர முடியுமா என்ற, 'டவுட்' வருதே! 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
ஜூலை 29, 2025 17:06

வீடு வீடாய்ப்போய், otp கொடுத்து, அதை பார்க்கும்போதே 'நீங்கள் திமுக உறுப்பினர்' என்று அவர்கள் சம்மதமின்றியே ஸ்டிக்கர் ஒட்டிவிட்டால் அவர்களெல்லாம் உங்களுக்கு ஓட்டுப்போடுவார்களா? பலவந்தமாக உறுப்பினராக்கி ஏமாற்றிய கோபத்தில் அப்படியே ஏத்தி ஓட்டுகளாக மாறும் வாய்ப்பும் இருக்கிறதே மக்கள் எந்த அணியில் சேரவேண்டும் என்று ஏங்கிக்கிடக்கிறார்களா ?