நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியினரை பார்த்து, 'உங்கள் கொள்கை என்ன?' என்று கேட்டால், 'தளபதி தளபதி' என்கின்றனர். அப்படி கத்தாதீங்க... எனக்கு, 'தலைவிதி தலைவிதி'ன்னு கேட்குது. சரி, 'எதுக்கு வந்தீங்க?'ன்னு கேட்டா, 'டி.வி.கே., டி.வி.கே.,'ன்னு சொல்றாங்க... அது, எனக்கு, 'டீ விக்க, டீ விக்க'ன்னு கேட்குது. டவுட் தனபாலு: அது சரி... த.வெ.க.,வின் வருகையை பார்த்து, அ.தி.மு.க., - தி.மு.க., கட்சிகள் கூட பெருசா அலட்டிக்கலை... ஆனா, நீங்கதான் அந்த கட்சியை போட்டு தாளிக்கிறீங்க... உங்க கட்சியின் ஓட்டு வங்கியில், விஜய் கட்சியால ஓட்டை விழுந்துடுமோன்னு நீங்க பயப் படுவது, 'டவுட்'டே இல்லாம தெரியுது! தமிழக கனிமவளத் துறை அமைச்சர் ரகுபதி: நடிகர் விஜய் மட்டுமல்ல, யாருடைய மதுரை மாநாடும், எவ்வித பாதிப்பையும், தாக்கத்தையும் ஏற்படுத்தாது. திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளே, எங்களுக்கு வெற்றியை தேடி தரும்; எங்கள் வெற்றி தொடரும். உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகத்திற்கு எத்தனை முறை வந்தாலும், தி.மு.க., கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படாது. டவுட் தனபாலு: வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்தது, கொங்கு மண்டலத்தில் முதிய தம்பதியர் படுகொலை, நெல்லையில் நடந்த ஆணவ கொலை, திருப்பூரில் எஸ்.ஐ., வெட்டி கொலை, நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள்னு திராவிட மாடல் ஆட்சியின், 'சாதனை'கள் நிறைய இருக்கே... நீங்க எதை சொல்றீங்க என்ற, 'டவுட்' வருதே! தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்: தேசிய ஜன நாயக கூட்டணி சார்பில், துணை ஜனாதிபதி வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டிருப்பதை வரவேற்கிறேன். பா.ஜ., கூட்டணியில் சேர்வது குறித்து, இதுவரை என்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை. பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ளதாக தகவல் வந்திருக்கிறது. அவரை, சந்திப்பீர்களா என அனைவரும் கேட்கின்றனர். இப்போதைக்கு எதையும் சொல்ல முடியாது. டவுட் தனபாலு: 'கூட்டணிக்கு புதிய கட்சிகள் வரும்'னு பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் போகும் இடங்களில் எல்லாம் கிளிப்பிள்ளை மாதிரி சொல்றாரு... ஆனாலும், உங்களை கண்டுக்கவே மாட்டேங்கிறாரே... நீங்க ரெண்டு பேரும் ஒரு காலத்தில் அ.தி.மு.க., அரசில் அமைச்சர்களா இருந்தப்ப, நயினார் நாகேந்திரனுடன் உங்களுக்கு ஏதாவது மனக்கசப்பு இருந் துச்சோ என்ற, 'டவுட்'தான் வருது!