உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ்: பணியில் உள்ள ஆசிரியர்கள், 'ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்பின் விபரம் முழுமையாக கிடைத்தவுடன், சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து, மேல்முறையீடு செய்யப்படும்; யாரும் கவலைப்பட வேண்டாம். எந்த காரணத்தை கொண்டும் ஆசிரியர்களை தமிழக அரசு கைவிடாது. டவுட் தனபாலு: ஏற்கனவே, உங்களது ஆஸ்தான ஓட்டு வங்கியான ஆசிரியர்கள், பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றாத விரக்தியில் இருக்காங்க... இப்ப, தகுதி தேர்வு கட்டாயம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை நீங்க அமல்படுத்தினால், உங்களை சுத்தமா கைகழுவிடுவாங்க என பயந்து தான், அவங்களை தாஜா பண்றீங்க என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!  தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு: தி.மு.க., அளித்த, 505 தேர்தல் வாக்குறுதிகளில், 364 திட்டங்களுக்கு பணிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. அரசின் பரிசீலனையில், 40 திட்டங்கள் உள்ளன. மத்திய அரசின் ஒப்புதலுக்காக, 37 திட்டங்கள் நிலுவையில் உள்ளன. இதுவரை, 64 தொலைநோக்கு திட்டங்கள் மட்டுமே நடவடிக்கைக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் உள்ளன. தேர்தல் அறிக்கையில் சொல்லாத பல திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு உள்ளன. டவுட் தனபாலு: அது சரி... அரசின் சாதனைகள் பத்தி, புள்ளி விபரங்களுடன் பக்கம் பக்கமா சாதனை விளம்பரங்களை வெளியிடுறீங்களே... அதேபோல, இந்த வாக்குறுதி விபரங்களையும் தெளிவான புள்ளி விபரங்களுடன் விளம்பரங்களா வெளியிட்டு, எதிர்க்கட்சிகளின் வாயை அடைக்கலாமே... இப்படி பொத்தாம் பொதுவா பதில் தருவது தானே நிறைய, 'டவுட்'களை கிளப்புது!  தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை: தமிழகத்தில், 'இண்டியா' கூட்டணியின் வலிமையை பார்த்து, இன்னும் பல கட்சிகள் சேர உள்ளன. தி.மு.க., கூட்டணியில் இருக்கும் மாநில கட்சிகள், வாய்க்கு வந்தபடி தொகுதிகளை கேட்டு அடம் பிடிக்கும் என தெரிகிறது. இந்த விஷயத்தில் காங்., தலைமை எங்களுக்கு எப்படி வழிகாட்டுகிறதோ, அதன்படி நடந்து கொள்வோம். டவுட் தனபாலு: தி.மு.க., கூட்டணியில் இருக்கும் நீங்க மற்றும் கம்யூ., கட்சிகள் எல்லாம் தேசிய கட்சிகள்... அதை விட்டா, ம.தி.மு.க., - வி.சி., உள்ளிட்ட சில கட்சிகள் தான் மாநில கட்சிகள்... அந்த கட்சிகள், வாய்க்கு வந்தபடி தொகுதிகளை கேட்டு, உங்க, 'கோட்டா'வுல, 'கை' வச்சிடும்னு பயப்படுறீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது! 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Anantharaman Srinivasan
செப் 05, 2025 22:11

நிரந்தம் செய்யப்படாமல் பல்லாண்டுகளாக வெறும் தொகுப்பூதியத்தில் வேலை செய்யும் தற்காலிக ஆசிரியர்களின் நிலையென்ன மகேஷ்..?


D.Ambujavalli
செப் 05, 2025 16:32

இது என்னடா கஷ்டம் ஏற்கெனவே ஆசிரியர்கள், போக்கு வரத்து ஊழியர்கள், தூய்மைப்பணியாளர்கள் என்று எதிர்க்குரல் நீண்டுகொண்டே போகும்போது, இந்த ‘ தேர்வு கட்டாயம்’ குண்டையும் போட்டு வரும் சில ஓட்டுகளுக்கும் வேட்டு வைத்துவிடுவார்களோ என்ற பதற்றம்தான் தெரிகிறது எந்த தகுதியும் இல்லாது ஆசிரியர் என்று வந்து போய்க்கொண்டு சம்பளம் வாங்குபவர்களுக்கு வயிற்றைக் கலக்கும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை