உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்: சென்னை, அண்ணா பல்கலை மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஞானசேகரன்; அரக்கோணம் கல்லுாரி மாணவியை கட்டாயப்படுத்தி, திருமணம் செய்த தெய்வச்செயல் என்பவர்; தற்போது, சென்னை கோயம்பேடில், 15 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய ரமேஷ் என, பெண்களை அச்சுறுத்தும் கயவர்கள் தொடர்ந்து, தி.மு.க., வினராகவே இருப்பது ஏன்? டவுட் தனபாலு: வாஸ்தவம் தான்... அவங்க எல்லாம், பாரம்பரியமா ஆளுங்கட்சியில் தான் இருக்காங்களா... ஒருவேளை, இதுபோன்ற ஏடாகூடமான காரியங்களை செய்துட்டு, அதில் இருந்து தப்புறதுக்காகவே, ஆளுங்கட்சியில் சேர்ந்தாங்களா என்ற, 'டவுட்'தான் வருது! lll தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன்: கரூர் சம்பவத்தில், பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களிடம் வீடியோ காலில் பேசிய த.வெ.க., தலைவர் விஜய், 'நான் உங்களுடன் இருக்கிறேன்' என, சொல்லி இருக்கிறாராம். தான் குற்றம் செய்யவில்லை என்றால், விஜய் நேரிலேயே சென்று ஆறுதல் தெரிவித்திருக்கலாம்; ஆனாலும், போகவில்லை. தன் நெஞ்சே தன்னை சுடும் என்ற காரணத்தால், விஜய்க்கு வெளியில் வர அச்சம். அதனால் தான், வீடியோ காலில் பேசியுள்ளார். டவுட் தனபாலு: அப்படி பார்த்தால், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடிச்சு, 67 பேர் இறந்து போனாங்களே... அது கூட மாநில அரசின், குறிப்பா, முதல்வர் வசமிருக்கும் போலீஸ் துறையின் தோல்வி தானே... அந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவங்களுக்கு ஆறுதல் சொல்ல, முதல்வர் ஸ்டாலின் போகாததற்கும், இதே குற்ற உணர்ச்சிதான் காரணமோ என்ற, 'டவுட்' வருதே! lll பத்திரிகை செய்தி: திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் அம்பேத்கர் நகர் பகுதி மக்கள், அடிப்படை வசதி மற்றும் வீட்டுமனை பட்டா கோரி, வி.ஏ.ஓ., அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்கள் கூறுகையில், 'கடந்த சட்டசபை தேர்தலின்போது ஓட்டு கேட்க வந்த, தி.மு.க., - எம்.எல்.ஏ., தேவராஜ், இங்குள்ள மாரியம்மன் கோவில் முன், கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்து, 'என்னை வெற்றி பெற வைத்தால், உங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பேன்' என்றார்; அதை நம்பி ஓட்டு போட்டோம். அவர் வெற்றி பெற்ற பின், இதுவரை ஒருமுறை கூட எங்கள் பகுதிக்கு வரவில்லை' என்றனர். டவுட் தனபாலு: இன்னும் ஆறு மாசத்துல தேர்தல் வர்றதால, எம்.எல்.ஏ., உங்களை தேடி வருவார்... அவரிடம், 'நீங்க தலையால தண்ணீர் குடிச்சாலும், இந்த முறை உங்களுக்கு ஓட்டு போட மாட்டோம்'னு, 'டவுட்'டுக்கு இடமில்லாம சொல்லி அனுப்பிடுங்க! lll


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ