உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

தமிழக பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா: விவசாயிகள் அனைவர் கையிலும் மொபைல் போன் இருக்கிறது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எந்த அதிகாரி, மூட்டைக்கு, 40 ரூபாய் லஞ்சம் கேட்கிறாரோ, அதை வீடியோ எடுங்கள். பின், அவர்களை மக்களை விட்டு கேள்வி கேட்க வையுங்கள். தேவையானால், திருமாவளவன் பாணியில் நாலு தட்டு தட்டி வையுங்கள். அப்போதாவது அவர்கள் திருந்துகின்றனரா என பார்ப்போம். டவுட் தனபாலு: திருமாவளவன் தரப்பு, நாலு தட்டு தட்டினாலும், ஆளுங்கட்சி கூட்டணியில் இருப்பதால், அவரை கண்டுக்காம விட்டுட்டாங்க... நீங்க இப்படி எல்லாம் ஏடாகூடமா பேசினால், 'வன்முறையை துாண்டுறார்'னு வழக்கு பதிவு பண்ணி உங்களை 'உள்ள' தள்ளிடுவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை! lll விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்: கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட, 41 குடும்பத்தினருக்கு, வி.சி., சார்பில் தலா, 50,000 ரூபாய்க்கான காசோலைகள் வழங்கப்பட உள்ளன. அதற்கான பணத்தை, கட்சியின் முன்னணி நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலர்களிடம் கேட்டுள்ளோம். ஒவ்வொரு மாவட்டச் செயலரும் தலா, 10,000 ரூபாயை கட்சி வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். பணம் இல்லாமல், காசோலை திரும்பி விட்டது என்ற நிலை வரக்கூடாது. டவுட் தனபாலு: ஆளுங்கட்சி கூட்டணியில் முக்கியமான கட்சியாக இருந்தும், 21 லட்சம் கூட உங்க கட்சி கணக்கில் இல்லையா...? தேர்தல் செலவுகளுக்கு எப்படியும் ஆளுங்கட்சி தரப்பில் இருந்து சில கோடிகளை தருவாங்கல்ல... அதுல ஒரு, 20 லட்சத்தை அட்வான்ஸ் வாங்கி, கட்சி கணக்குல கட்டிட்டா பிரச்னை இருக்காது என்பதில், 'டவுட்'டே இல்லை! lll தமிழக காங்., மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர்: கூட்டணி குறித்து, நம் கட்சித் தலைவர்கள் யாரும் பொதுவெளியில் பேச வேண்டாம். ஒவ்வொருவருக்கும் உள்ள கருத்தை சோனியா, ராகுல், கார்கே ஆகியோரிடம் சொல்லுங்கள். அதற்காக, டில்லிக்கு வாருங்கள்; நானே அவர்களிடம் நேரம் வாங்கி தருகிறேன். அவர்களும் உங்கள் கருத்தை கேட்கட்டும். அதன்பின், அவர்கள் கூட்டணி குறித்து இறுதி முடிவெடுக்கட்டும். டவுட் தனபாலு: முதல்ல சோனியா, ராகுலை சந்திக்க, இவருக்கே கேட்டதும் நேரம் கிடைப்பது, 'டவுட்' தான்... இவருக்கு அவங்க நேரம் கொடுத்து, தமிழக நிர்வாகிகளுக்கு இவர் நேரம் வாங்கி கொடுத்து, சந்திச்சு பேசி கூட்டணியை முடிவு பண்றதுக்குள்ள, தமிழக சட்டசபை தேர்தலே முடிஞ்சிடும் என்பதில், 'டவுட்'டே இல்லை! lll


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ