உள்ளூர் செய்திகள்

 டவுட் தனபாலு

சிவகங்கை தொகுதி காங்., - எம்.பி., கார்த்தி: 'பீஹாரில் ஓட்டு திருட்டு நடந்தது' என, சிலர் கூறுகின்றனர். அப்படி நடந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் என்னிடம் கிடையாது. பீஹாரில், தே.ஜ., கூட்டணி வலுவான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதோடு, மாநிலத்தை ஆளும் அக்கூட்டணியினர், கடைசி கட்டத்தில் பெண்களுக்கு தலா, 10,000 ரூபாய் உதவித்தொகை வழங்கினர். இதுதான், பீஹாரில் காங்., கூட்டணி பின்னடைவுக்கு காரணம். பீஹாரை போன்று தமிழகத்திலும் தி.மு.க., அரசு, தேர்தல் நெருக்கத்தில் பெண்களுக்கு, 10,000 ரூபாய் வழங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. டவுட் தனபாலு: பீஹாரில் மத்திய அரசு உதவியுடன், 1.21 கோடி பெண்களுக்கு மாநில அரசு, தலா, 10,000 ரூபாயை குடுத்தது உண்மை தான்... ஆனா, ஏற்கனவே நிதி நெருக்கடியில் தள்ளாடிட்டு இருக்கும் தி.மு.க., அரசை, '10,000 ரூபாய் குடுத்தால் தான் ஜெயிக்க முடியும்'னு இவர் பயம் காட்டுவது, 'டவுட்' இல்லாம தெரியுது! lll பத்திரிகை செய்தி: அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் இடம் பெற்றுள்ள, த.மா.கா., தலைவர் வாசன், சேலத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை சந்தித்து பேசிய போது, 'த.மா.கா.,வுக்கு, 12 தொகுதிகள் ஒதுக்க வேண்டும்' என கேட்டுக் கொண்டதாகவும், அதற்கு, 'பா.ஜ., தலைமையுடன் பேசி முடிவெடுக்கலாம்' என, பழனிசாமி கூறியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. டவுட் தனபாலு: அது சரி... 'அ.தி.மு.க., கூட்டணியில் தான், பா.ஜ., தவிர பெரிய கட்சிகள் வேற இல்லையே'ன்னு நினைச்சு வாசன் கேட்டாரா அல்லது 'எப்படியாவது நம்ம கட்சியில, 12 பேரை வேட்பாளர்களா தேடி பிடிச்சிடலாம்' என்ற துணிச்சல்ல, 12 தொகுதிகளை கேட்டாரா என்ற, 'டவுட்' தான் வருது! lll பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ்: நான் தற்போது முனைவர் பட்டம் பெற்றுள்ளேன். அதற்கான வாய்மொழி தேர்வு, பொதுமக்கள், கல்வியாளர்கள் முன்னிலையில் நடந்தது. நான், என் முனைவர் பட்டத்துக்காக, களத்தில் ஆய்வு செய்ததால் தான், அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடிந்தது. அதுபோல், முனைவர் பட்டம் பெற்றவர்களின் திறமையை, யார் வேண்டுமானாலும் சோதிக்கலாம். டவுட் தனபாலு: முனைவர் பட்டம் பெற்றதற்கு வாழ்த்துகள்... அதே நேரம், உங்களிடம் கேள்வி கேட்டவங்க, 'அமைச்சரிடம் போய் கேள்வி கேட்கிறோமே... நாளைக்கு பிரச்னை ஏதும் வந்துடாதே'ன்னு நினைச்சு, ஈசியான கேள்விகளா கேட்டிருப்பாங்களோ என்ற, 'டவுட்'டும் வருது! lll


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !