உள்ளூர் செய்திகள்

 டவுட் தனபாலு

புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி : திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது என்பது, தமிழ் மண்ணோடு, மொழியோடு பின்னி பிணைந்த கலாசாரம். இவ்விவகாரத்தில், தி.மு.க., அரசியல் செய்வது நல்லதல்ல. அங்கிருக்கும் தீபத்துாணை கிரானைட் துாண், எல்லைக்கல், சமணர் துாண் எ ன்றெல்லாம் கூறிவிட்டு, எதையும் நிரூபிக்க முடியாத நிலையில் , தற்போது தி.மு.க., அரசு தவிக்கிறது. யாரோ தமிழக அரசை தவறாக வழி நடத்துகின்றனர். டவுட் தனபாலு: யாரும் தவறாக வழிநடத்தும் அளவுக்கு, தி.மு.க.,வினர் ஒன்றும் அப்பாவிகள் இல்லையே... தேர்தல் நேரம் என்பதால், சில குறிப்பிட்ட சமூகத்தினரின் ஓட்டு வங்கியை மனதில் வைத்து தான், திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில், ஆளும் கட்சியினர் அரசியல் பண்றாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை! தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி: தமிழகத்தில், ஏழாவது முறையாக தி.மு.க., ஆட்சி அமைக்கவும், முதல்வர் ஸ்டாலின் இரண்டாவது முறையாக முதல்வராக தொடரும் வகையிலும், தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணி வெற்றிகரமாக அமையும். மத்திய அரசு வேலைவாய்ப்பை பறிப்பதையே, ஒரு வேலையாக செய்து கொண்டிருக்கிறது. அதனால், தமிழகத்தின் வளர்ச்சியை மையமாக வைத்து, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, மகளிர் உரிமை, விவசாயிகள் பாதுகாப்பு போன்றவற்றை உள்ளடக்கியதாக, தி.மு.க., தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும். டவுட் தனபாலு: நீங்க, புதுசா வேலைவாய்ப்புகள் எதையும் உருவாக்கவே வேண்டாம்... அரசு துறைகளில் இருக்கும் லட்சக்கணக்கான காலி பணியிடங்களை நிரப்பினாலே, தமிழக இளைஞர்கள் பலன் பெறுவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை! தமிழக காங்., மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர்: தி.மு.க., தலைவர்கள் டில்லி வந்து, எங்கள் தலைவர்களை சந்தித்து பேசினர். அதன்பின், முதல்வர் ஸ்டாலினை நாங்கள் சந்தித்து, டிச., 15க்குள் கூட்டணியை இறுதிப்படுத்த வலியுறுத்தினோம். அப்போது தான், எங்கள் கட்சி வேட்பாளர்களை அடையாளம் கண்டு, களமிறக்க போதுமான நேரம் கிடைக்கும். தற்போது, தி.மு.க., கையில் தான் பந்து உள்ளது ; அவர்களின் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். டவுட் தனபாலு: ஆனா நீங்க விதித்த, 'கெடு'வை, தி.மு.க., தரப்பு கண்டுக்காமல் இருக்குதே... அவங்களை எச்சரிக்கும் விதமாகத்தான், உங்க கட்சியின் பொதுச்செயலர் வேணுகோபால் சென்னை வந்து, ரகசியமா விஜய் கட்சி நிர்வாகிகளுடன் கூட்டணி பேசிட்டு போயிருக்காரோ என்ற, 'டவுட்' வருதே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ