தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ்: 'தி.மு.க.,விற்கு புது ரத்தம் பாய்ச்ச வேண்டும்; மூத்தவர்களின் ஆலோசனைகளும் தேவை' என்ற அடிப்படையில் தான், துணை முதல்வர் உதயநிதி செயல்படுகிறார். நாங்கள், 'திராவிட மாடல் 2.0'வில் கவனம் செலுத்தி வருகிறோம். அதனால், பிற கட்சிகளை பற்றி கவலையில்லை. டவுட் தனபாலு: நீங்க சொல்றதை பார்த்தால், 'வர்ற தேர்தலில், இளைஞர் அணியினருக்கு தான் அதிக சீட்கள் தரப் போறோம்... துரைமுருகன், நேரு போன்ற சீனியர்கள் எல்லாம் ஓரமா ஒதுங்கியிருந்து, எங்களுக்கு ஆலோசனைகள் மட்டும் தந்தா போதும்'னு சொல்லாம சொல்றீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது! விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்: எக்காலத்திலும், பா.ம.க.,வுடன் உறவில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன். பா.ம.க., இரண்டாக உடைந்து விட்டது. 'உடைந்ததில் ஒன்று தி.மு.க., கூட்டணிக்கு வந்தால் ஏற்பீர்களா?' என, சிலர் கேட்கின்றனர். ஆனால், நாங்கள் ஏற்க மாட்டோம். சில தொகுதிகளில் வெற்றி பெறுவதற்காக, ஜாதியவாத, மதவாத சக்திகளுடன் நாங்கள் சமரசம் செய்து கொள்ள மாட்டோம். டவுட் தனபாலு: ராமதாஸ் தலைமையில் இயங்கும் பா.ம.க.,வை தி.மு.க., அணியில் சேர்க்க பேச்சுகள் நடப்பதாக, தகவல்கள் உலா வருதே... ஒருவேளை தி.மு.க., கூட்டணிக்கு அவங்க வந்துட்டா, நாளைக்கு ஒரே மேடையில் ராமதாசை வச்சுக்கிட்டு, 'தமிழ் குடிதாங்கி, சமூக நீதி போராளி' என்றெல்லாம் புகழ் பாடாம இருப்பீங்களா என்ற, 'டவுட்' வருதே! அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன்: தமிழகத்தில் உள்ள, 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில், அ.ம.மு.க., கட்டமைப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பல மாவட்டங்களில் எங்கள் ஓட்டு வங்கி அதிகரித்துள்ளது. 2026 சட்டசபை தேர்தலில் அ.ம.மு.க.,வை தவிர்த்து, எந்த கூட்டணியும் வெற்றி பெற முடியாது என்ற நிலையை ஏற்படுத்தி உள்ளோம். அ.ம.மு.க.,வை தங்கள் கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்று, பெரிய கட்சிகளும், புதிய கூட்டணியை உருவாக்க விரும்பும் கட்சிகளும் எங்களை தொடர்ந்து அணுகி வருகின்றன. டவுட் தனபாலு: இவ்வளவு செல்வாக்கு உள்ள நீங்க ஏன், மற்ற கூட்டணிகளுக்கு போகணும்... பேசாம, உங்க கட்சி தலைமையிலேயே ஒரு கூட்டணியை உருவாக்கி, தேர்தலை சந்தித்து முதல்வராகிடலாமே... உங்களை யார் தடுக்கிறாங்க என்ற, 'டவுட்' எழுதே!