தமிழக முதல்வர் ஸ்டாலின்: 'நான் பழைய பாடல்களை விரும்பிக் கேட்பேன். மறைந்த முதல்வர் எம்.ஜி. ஆர்., நடித்த படங்களில் இடம் பெற்ற பாடல்கள் அதிகம் பிடிக்கும். அதனால், அதைத் தான் அதிகம் கேட்பேன். மன்னாதி மன்னன் படத்தில் வரும், 'அச்சம் என்பது மடமையா... அஞ்சாமை திராவிட உடைமையடா' என்ற பாடல், விரும்பி கேட்கப்படும் பாடல். அதே போல், 'நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை' என்ற பாடலையும் அதிகமாக கேட்டிருக்கிறேன்; கேட்டுக் கொண்டே இருக்கிறேன். டவுட் தனபாலு: மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., படத்தில், அரசியல் சார்ந்த பாடல்கள் எல்லாமே, தி.மு.க.,வுக்கும் பொருந்தும். அதனால் முதல்வர் அதைக் கேட்டு ரசிப்பதில் தவறில்லை தான். ஆனால், 'நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை' என்ற பாடலை, யாரை மனதில் வைத்துப் பாடுகிறார்... பெரிய, 'டவுட்' எழுகிறதே? த.வெ.க., கட்சித் தலைவர் விஜய்: தமிழகத்தில் வரவிருக்கும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளை செய்ய, கட்சி யின், 10 உறுப்பினர்களை நியமிக்கிறேன். அதில், கட்சியின் பொதுச் செயலர் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் போன்றோர் இடம் பெறுவர். இவர்கள், தமிழகம் முழுதும் கட்சிக் கூட்டங்களை நடத்துவது குறித்து முடிவு செய்வர். டவுட் தனபாலு: கட்சிக் கூட்டம் நடத்துவதற்கு இந்த கூட்டணி முடிவு செய்யும். ஆனால், அதில் உங்கள் பெயரைச் சேர்க்கச் சொல்லுங்க... கரூரில், 41 பேர் பலியான விவகாரத்திற்குப் பிறகு, பொதுமக்களோடு கலந்துரையாட நீங்கள் தயக்கம் காட்டுவது புரிகிறது. ஆனால், மீண்டும் களமிறங்கினால், மவுசை இன்னும் அதிகரிக்கலாம்ங்கிறதுல, 'டவுட்'டே இல்லை! சென்னையில், காங்கிரஸ் பொதுச் செயலர்களில் ஒருவரான, முன்னாள் மத்திய அமைச்சர் சச்சின் பைலட்: தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி பலம் வாய்ந்ததாக உள்ளது. இங்கு, எங்கள் கட்சிக்கு பாரம்பரிய ஆதரவும், ஓட்டு சதவீதமும் உள்ளது. பா.ஜ., கூட்டணிக்கு, தமிழகத்தில் எப்போதுமே ஆதரவு கிடையாது. எத்தனை தேர்தல் நடந்தாலும், பா.ஜ.,வும், அதன் கூட்டணி கட்சிகளும் தோல்வியை தான் தழுவும். இதனால், பா.ஜ., என்றைக்கும் தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது. டவுட் தனபாலு: வட மாநிலத்தவரான, தமிழே தெரியாத சச்சின் பைலட், யாரோ எழுதிக் கொடுத்ததை, கனகச்சிதமாகப் படித்திருக்கிறார்... இங்கே, தி.மு.க., படகில் சவாரி செய்யும் காங்கிரசின் நிலை, பைலட்டுக்கு புரியணும் எனில், தமிழகத்திற்கு பல முறை வந்து, 'பல்ஸ்' பார்க்கணும்ங்கிறதுல, 'டவுட்' இல்லை!