டவுட் தனபாலு
ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்: ஹிந்துக்களின் ஓட்டுகள், ஜாதி, மத அடிப்படையிலும், பணம் மற்றும் பரிசு பொருட்கள் வாயிலாகவும் சிதறடிக்கப்படுகின்றன. இதை களைய, ஹிந்து ஓட்டு வங்கியை உருவாக்க வேண்டும். அதேபோல், ஹிந்து சமயத்தை கேலி, கிண்டல் செய்த தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்முடி போன்ற நாத்திகர்களுக்கு, ஆன்மிகவாதிகள் ஓட்டு போடக்கூடாது. அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும். டவுட் தனபாலு: நீங்க சொல்றது வாஸ்தவம் தான்... ஜாதி, பணம், பரிசுகளுக்கு மயங்காமல், ஹிந்துக்கள் ஒற்றுமையுடன் ஓட்டு போட்டால், பொன்முடி போன்றவங்க அரசியலில் மீண்டும் தலையெடுக்க முடியாது... ஆனா, அது நடக்குமா என்பது தான், 'டவுட்!' தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன்: கடந்த 2024 லோக்சபா தேர்தலில், பிரதமர் மோடிக்கு ஆதரவு தெரிவிக்காமல், 'பா.ஜ.,வுடன் எப்போதுமே கூட்டணி கிடையாது' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறினார். இப்போது எப்படி சரண்டர் ஆனார்? அவரது சம்பந்தி மற்றும் மகனை பா.ஜ.,வினர் பிடித்தனர். தன் குடும்பத்தை காப்பாற்ற, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கட்டிக்காத்த கட்சியை பழனிசாமி அடகு வைத்து விட்டார். டவுட் தனபாலு: கடந்த 2014 லோக்சபா தேர்தலில், நீங்க கூட, 'கூடா நட்பு கேடாய் முடிந்தது'ன்னு சொல்லி, காங்., கட்சியை கழற்றி விட்டுட்டு, தேர்தலை சந்திக்கலையா... 2016 சட்டசபை தேர்தலில், மறுபடியும் அதே கட்சியுடன் கூட்டணி சேர்ந்துட்டீங்களே... ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு எடுப்பது, எல்லா கட்சிகளும் செய்றது தான் என்பதில், 'டவுட்'டே இல்லை! தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு: கடந்த ஐந்து ஆண்டுகளாக, தி.மு.க., அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அரசு அதிகாரிகள் பெருந்துணையாக இருந்துள்ளனர். பணி நிமித்தமாக, சில நேரங்களில் அரசு அதிகாரிகளிடம் நான் கடுமையாக பேசியிருந்தால், அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வர, அரசு அதிகாரிகள் துணை நிற்க வேண்டும். டவுட் தனபாலு: அது சரி... தேர்தலின் போது, அதிகாரிகள் தயவு இருந்தால் தான் ஆளுங்கட்சி கரையேற முடியும்னு நினைக்கிறீங்களோ... அதனால தான், 'உங்களை திட்டியதை எல்லாம் மனசுல வச்சுக்கிட்டு, தேர்தலின் போது பழிவாங்கிடாதீங்க'ன்னு வெளிப்படையா வருத்தம் தெரிவிச்சிருக்கீங்க என்பது, 'டவுட்' இல்லாம தெரியுது!