உள்ளூர் செய்திகள்

 டவுட் தனபாலு

விருதுநகர் காங்., - எம்.பி., மாணிக்கம் தாகூர்: கடந்த ஐந்தாண்டு தி.மு.க., ஆட்சியில், காங்கிரசார் நடத்தப்பட்ட விதத்தால், மனதளவில் வருத்தங்கள் உள்ளன. அவை ஒரு பக்கம் இருந்தாலும், காங்., தலைமை முடிவுக்கு கட்டுப்பட்டு, கூட்டணியில் உள்ள பஞ்சாயத்துகள், வேதனைகளை தள்ளிவைக்க முடிவெடுத்துள்ளோம். வருத்தங்களை தள்ளி வைத்துவிட்டு, தி.மு.க., கூட்டணி கட்சிகளை முழு மனதுடன் ஆதரிக்கிறோம். டவுட் தனபாலு: வருத்தங்கள் உங்களுக்கு மட்டுமா... உங்க தலைவர் ராகுலுக்கே, தி.மு.க., தலைமை மீது ஏகப்பட்ட வருத்தங்கள் இருக்கிறதா சொல்றாங்களே... மாநில அளவில் நீங்க வருத்தங்களை மறந்துட்டாலும், தேசிய தலைவரான ராகுல் அவ்வளவு சீக்கிரம் எல்லாத்தையும் மறந்துட்டு, தமிழகத்துக்கு பிரசாரத்துக்கு வருவாரா என்பது, 'டவுட்' தான்! lll நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப் பாளர் சீமான்: எத்தனை காலத்திற்கு தான் இரட்டை இலைக்கும், உதயசூரியனுக்கும் ஓட்டு போடுவீர்கள்? ஓட்டுக்கு காசு கொடுக்கும்போது, ஜனநாயகம் செத்து பணநாயகம் வென்று விடுகிறது. தேர்தல் வெற்றிக்காக முதலீடு செய்பவர்கள், பல மடங்கு லாபத்தை எடுக்கத்தான் நினைப்பர். டவுட் தனபாலு: அரசியல் என்பது தொழிலாக மாறி, 50 வருஷங்களுக்கு மேலாகிடுச்சு... அதுல முதலீடு போட்டு, பல மடங்கு லாபம் எடுக்கத்தான் எல்லாரும் ஆசைப்படுறாங்க... மக்களுக்கும் இது நல்லாவே தெரியும்... அதனால தான், காசை வாங்கிட்டு கமுக்கமா ஓட்டு போடுறாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை! lll பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பீயூஷ் கோயல்: மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கையை திருத்தி தருமாறு கேட்டதற்கு, அதை திருத்தம் செய்து அனுப்பாமல், மத்திய அரசு மறுப்பு தெரிவித்து விட்டதாக, தி.மு.க.,வினர் பொய் செய்தி பரப்புகின்றனர். மதுரை விமான நிலைய விரிவாக்க பணிக்கும், நிலத்தை முழுமையாக கையகப்படுத்தி தரவில்லை. டவுட் தனபாலு: அது சரி... இதே, மத்தியில் தி.மு.க.,வின் கூட்டணி கட்சி ஆட்சியில் இருந்தா, சத்தம் காட்டாம திருத்திய அறிக்கையை அனுப்பி, திட்டங்களுக்கு ஒப்புதல் வாங்கியிருப்பாங்க... இப்ப, மத்திய பா.ஜ., அரசுக்கு எதிராக அரசியல் பண்றதுக்காகவே, மெட்ரோ திட்டங்களை ஆளுங்கட்சியினர் பயன்படுத்திக்கிறாங்க என்பதை, 'டவுட்' இல்லாம நிரூபிச்சிட்டீங்க! lll


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி